தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.
செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.
கோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.
ஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்தவன் சோழ மன்னன் கரிகால் வளவன்.
சங்ககால சோழ மன்னர்களுள் காலத்தால் முந்தியவனாகக் கருதப்படுபவன் சோழன் இளஞ்சேட்சென்னி. இவனது வீரத்தையும், இவனது நால்வகைச் சேனைப்படைகளையும், அவனது வள்ளல் குணத்தையும் விளக்கும் வகையில் அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனது திருக்குமாரனாகப் பிறந்தவன் கரிகாலன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன் என்ற சிறப்பைக் கொண்டவன் கரிகால வளவன். இவனுக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், கரிகால் வளவன், வளவன் என்ற பெயர்களும் உண்டு.
கரிகால் வளவனின் ஆட்சி காலத்தில் அவனுக்குப் புகழ் சேர்த்த போர் என்றால் அது வெண்ணி வாயில் போர் எனக் குறிப்பிடலாம். தென்னாசிய அளவில் மிகப்பெரியதொரு போர் என்ற சிறப்புடன் இப்போர் வர்ணிக்கப்படுகின்றது. கரிகால் வளவன் தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ள வென்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுடனும், பாண்டிய மன்னனுடனும், பதினொரு வேளிருடனும் போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் கரிகால் வளவனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. மூன்று தலைமுறைகளாக சோழ மன்னர்களுக்கிடையே இருந்த குழுச்சண்டை முடிவுக்கு வந்து துறைமுக நகரமான புகார் நகரமும், தலநகரமான உறையூரும் பெருமை பெற்றது. தமிழகத்தைக் கைப்பற்றி பின்னர் வடநாட்டிற்கும் சென்று, அங்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் போர் நடத்தி அவ்வூர்களையெல்லாம் வென்று இமயம் வரை சென்று அங்கு போரிட்டு வெற்றிக் கொடி நாட்டினான் கரிகால் வளவன். சோழப் பேரரசு தென்னிந்தியா முழுமையுமான பேரரசாகவும், கரிகால் வளவன் பேரரசனாகவும் உருவெடுக்க வெண்ணிப்பறந்தலைப் போர் மிக முக்கியக் காரணியாக அமைந்தது.
தரைப்படை மட்டுமன்றி கடற்படை பலமும் கொண்டிருந்தான் கரிகால் பெருவளத்தான். இப்படை பலத்துடன் இலங்கையில் போரிட்டு இலங்கையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான் இச்சோழமன்னன். அவனது ஆட்சி காலத்தில் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு புகார் நகரத்தில் ஏற்பட்டு வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. காவிரி வெள்ளத்தில் அடித்துவரும் மணல் கடல் வாணிபத்தையும் பாதித்ததோடு கப்பல், மற்றும் படகு போக்குவரத்துக்கு மிகுந்த இடையூற்றையும் ஏற்படுத்தியது. ஆக இதனை சரி செய்ய ஒரு அணையைக் கட்டி நீர் நிலையை சரி செய்து துறை முகத்தை பாதுகாப்பதுடன் தமிழகத்தின் விவசாயத்தைச் செழுமைப்படுத்தவும் முயற்சி எடுத்தான் வளவன். தனது பெரும்படையின் பலத்துடனும் இலங்கைப் போரில் தோல்வி கண்ட படையினரையும் கொண்டு தமிழகத்தின் காவிரியாற்றின் கரைப்பகுதியைச் சீரமைத்து உயர்த்திக் கட்டினான் பெருவளத்தான். காவிரியில் கல்லணை கட்டி தலைநகரான உறையூர் வரை நிலையான நீர்ப்போக்குவரத்து விரிவடைய வழி செய்தான் நீர் மேலாண்மையில் தனித்திறன் கொண்டிருந்த கரிகால் வளவன். வெண்ணிப் போரின் நினைவாக கரிகாலன் வெட்டிய ஆறு இன்றைக்கு வெண்ணாறு என அழைக்கப்படுகின்றது (வெண்ணியாறு என்பதன் திரிபு). இந்த ஆற்றின் தலைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளதுதான் கரிகாலன் திருமாவளவன் கட்டிய கல்லணை.
இந்தக் கல்லணையைக் கட்ட சோழ நாட்டின் கரூர், முசிறி என்ற நகரங்களிலிருந்து வெட்டியெடுத்து ஆற்று வழியே கொண்டு வரப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவை ஆங்கிலேய காலணித்துவ அரசு ஆண்ட போது இக்கல்லணையைப் பரிசோதித்து இடிக்கும் படி முடிவெடுத்து பொறுப்பை சர் ஆர்தர் காட்டன் என்பவருக்குக் கொடுத்தனராம் .அவர் தலைமையில் இயங்கிய குழு இக்கல்லணையைப் பரிசோதித்து இதன் கட்டுமானத் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்து அதிசயித்து இதனை Grand Anaicut, அதாவது மாபெரும் அணைக்கட்டு என்று கூறிப் புகழ்ந்து சென்றதாம்.
இந்தக் கல்லணை ஏனைய கல்லணைகளுக்கும் பொறியியல் ரீதியில் உதாரணமாக அமைந்தது. கோதாவரியில் அமைக்கப்பட்ட கல்லணையும் இதே தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டதே. இந்த கல்லணையின் பொறியியல் நுட்பத்திறன் பின்னர் ஆங்கிலேய அரசு அமைத்த பாலங்களின் கட்டுமானம், ஏரி அணை அமைப்புக் கட்டுமாணம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது இதன் தொழில்நுட்பத்திறனுக்குக் கிடைத்திருக்கும் பெருமை.
உலகமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது நீர் நிலைகளே. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சோழன் கரிகால் வளவன் தூரநோக்குச் சிந்தனையுடன் நாட்டு மக்கள் நலன் கருதி எடுப்பித்த கல்லணை இன்றளவும் காவிரி நீர்ப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி நாட்டு மக்கள் நலன தரும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருச்சியின் மையப்பகுதியில் கிறித்துவ தேவாலயங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பாலக்கரைபகுதியில் இடையர்தெரு எனப்படும் எடத்தெருவில் உள்ளது. கிபி 16ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில்.
செபமாலைமாதாகோயில் அல்லது பழையகோயில் என இந்தத் தேவாலயம் அழைக்கப்படுகின்றது. வரகனேரியில் உள்ள கோயிலை அடுத்து இதுவே தொன்மையானதும் கூட. இக்கோயில் கோபுரத்தில் பத்துக்கட்டளைகள், அதாவது Ten Commandments தமிழிலேயே எழுதப்பெற்றுள்ளன. அவற்றைக்குறிப்பிடும் எண்கள் தமிழ் எண்கள். அக்காலப் பயன்பாட்டில் தமிழ்எண்கள் பயன்படுத்த பட்டுள்ளன என்பதற்கு இது நல்லச் சான்றாக அமைகின்றது. இம்மாதிரியான அக்கால தேவாலயங்களில் சைவ வைணவக்கோயில்களைப்போல தேர்கள், தேர்ஓடும்வீதி என்பன உண்டு.இக்கோயிலைச்சுற்றிய தேரோடும்வீதி இன்றும் இருக்கின்றது. இக்கோயில் உள்ள தெருவிலேயே உலகமீட்பர்பசலிகா உள்ளது.எனவே அதிலிருந்து இதனை வேறுபடுத்தி சொல்ல பழையகோயில் என இந்தத் தேவாலயத்தை அழைக்கின்றனர்.
இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்கும் பேரா.முனைவர்.வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
முதன் முதலில் நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.
தூய வளநார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.
கல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ இக்கல்லூ ரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:
170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி
16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களுக்கு தொழில் மர்றும் கல்வித்துறைகளில் சேவைகளைச் செய்து வந்தமை
வீரமாமுனிவரின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்
பிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்
ராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை
கல்வியைப் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த முயற்சி
இக்கல்லூரியின் ஆய்வுத் துரைகள்
இக்கல்லூரியின் மிகப்பெரிய நூலகம்
இக்கல்லூரியில் படித்த அறிஞர்கள்
...
இப்படி பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.
இப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இந்தப்பதிவில் தமிழக கிராமங்களில் வயல்பகுதிகளில் அமைந்திருக்கின்ற ஏரிக்காத்த ஐயனார் அல்லது வயல்காத்த ஐயனார் கோயிலைக் காணலாம்.
புரவி எடுப்புத் திருநாள் என்பது ஒரு விவசாயி தன் நிலத்தின் விளைச்சலை போற்றும் வகையில் ஐயனார் சாமிக்கு புரவி செய்து தூக்கிக்கொண்டு வந்து இந்த ஐயனார் கோயிலில் வைத்து விட்டு வேண்டிச் செல்லுதல் என்பதாக இருக்கின்றது.
இந்தப் பதிவில் சிவகங்கை மாவட்டத்து மரவன்மங்கலம் எனும் ஊரில் உள்ள இத்தகைய ஒரு கோயிலைக் காண்கின்றோம்.
இந்தப்பதிவில் இக்கோயிலைப்பற்றிய விளக்கம் தருபவர் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியை முனைவர் மலர்விழி மங்கை. அவருக்கு நம் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் உள்ளது. பண்டைய தமிழ் மக்களின் பழமை வாய்ந்த தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக இக்கோயிலைக் காண்கின்றோம். கருவறையில் பத்ராகாளியம்மன் எட்டு கைகளுடன் மகிஷனின் தலைமேல் கால் வைத்த வடியில் மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சியளிக்கின்றாள்.
இந்த பத்ரகாளியம்மன் ஆலயத்திலேயே வெளிப்பிரகாரத்தின் பின்புறத்தில் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற நாட்டார் குலதெய்வ வடிவங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன . சப்த கன்னிகள், வீரபத்திரன் என வெவ்வேறு வழிபாட்டு வடிவங்கள் நிறைந்த ஒரு வழிபடுதலமாக, ஊர் மக்களும் ஏனையோரும் வந்து வணங்கிச் செல்லும் சிறப்பு மிக்க ஒரு தெய்வீகத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் இன்றைக்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபாட்டில் இருந்திருக்கக்கூடும் என்று அறியும் வகையில் இக்கோயிலின் வளாகத்தில் நவகண்டம் என அழைக்கப்படும் மனித உருவங்கள் பொறித்த கற்சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கோயிலின் உட்புறச்சுவற்றில் பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்து கல்வெட்டுக்களும் சுவற்சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புனரமைப்பில் சில பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் சில வடிவங்களை மேற்பக்கச் சுவர்களில் காண முடிகின்றது. இக்கோயிலைப் புனரமைப்பு செய்த வேளையில் இதன் சுற்றுப்புரப்பகுதியில் காணப்பட்ட நவகண்ட வடிவங்களைக் கோயிலின் பின்புறத்தில் கிடத்தி வைத்துள்ளனர்.
நவகண்டம் என்பது தன்னையே இறைவனுக்காகவோ அல்லது போருக்குச் செல்லும் தலைவன் அல்லது அரசனின் வெற்றியை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு தன்னையே வாளால் வெட்டி பலிகொடுத்துக் கொள்வதைக்காட்டும் கற்சிற்பம். இவ்வகைக் கற்சிற்பம் ஒன்று இக்கோயிலில் பின்புறத்தில் தரையில் மண்புதரின் மேல் கிடத்தி வைக்கப்பட்டு கிடக்கின்றது. இது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னம் என்பதில் சந்தேகமில்லை.
நான் இந்த ஆண்டு ஜனவர் 4 தேதி நேரில் சென்றிருந்த போது அச்சிற்பத்தைத்தேடிக் கண்டுபிடித்து அதனை மண் புதர் பகுதியிலிருந்து மாற்றி எடுக்கக் கோயில் நிர்வாகத்தினரை அணுகிக்கேட்க அவர்கள் அச்சிற்பத்தை எடுக்க முன்வந்தனர். இன்று அந்தச் சிற்பம் எந்த நிலையில் இருக்கின்றது எனத் தெரியவில்லை. இச்சிற்பம் தூய்மை செய்யப்பட்டு மீண்டும் இங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும்.
இந்தப் பதிவைச் செய்த போது பயனத்தில் இணைந்து கொண்ட திருமதி.மவளசங்கரி அவர்களுக்கும் பயண ஏற்பாட்டில் உடஹ்வி செய்டஹ் செவாலியர் டாக்டர்.மதிவாணன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
செஞ்சி வட்டம் மேல்கூடலூரில் உள்ள என்ணாயிரம் மலை, அல்லது பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களைக் கொண்டிருக்கும் ஒரு பகுதி. இங்கு 35 சமணக்கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்திலேயே மிக அதிகமான சமணக்கற்படுக்கைக்களைக் கொண்ட ஒரு பகுதியாக இப்பகுதி திகழ்கின்றது.
அதுமட்டுமன்றி பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டுக்களும் (கி.பி.867) கோப்பரகேசரி என்றழைக்கப்பட்ட சோழமன்னன் முதலாம் பராந்தகனின் நான்காவது ஆட்சியாண்டு (கி.பி.911) கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன.
இவ்வளவு சிறப்புக்கள் மிக்க இந்தக் குன்றில் குவாரி உடைப்பு நடைபெற்றிருக்கின்றது. இதனால் இக்குன்றின் பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட பகுதியில் உடைந்து போன நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே வரலாற்றுப் புராதனச் சின்னங்களை அடையாளங்கண்டு அவை பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தப் பகுதி இதுவரை இணைக்கப்படவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய விசயம். கல்வெட்டுக்களும் சமண முனிவர் படுக்கைகளும் மட்டுமன்றி மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட தியானக்கற்பகுதி, மூலிகை தயாரிப்புப்பகுதி என வரலாற்று வளம் மிக்க ஒரு பகுதியாக இப்பகுதி விளங்குகின்றது.
இப்பகுதியைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்த விழியப்பதிவில் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர். ரமேஷ் இக்குன்றின் சிறப்புக்களை விவரிக்கின்றார்.
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
நாட்டார் வழக்காற்றியல் என்பது தமிழர் மரபில் சிறப்பிடம் பெறுவது. கிராமத்து தெய்வ வழிபாட்டு முறைகளும் தெய்வங்களும் இதன் ஒரு கூறாக அமைகின்றன.
நம்பிக்கை, பக்தி என்பன மக்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கம் வகிக்கும் அம்சமாக விளங்குகின்றன. தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாலும், கிராமத்துக்குக் கிராமம், ஊருக்கு ஊர் என தெய்வங்கள் வெவ்வேறு வகையில் வழிபாட்டில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.
கொங்குமண்டலத்தில், கிராமப்புர கோயில்கள் என்பன விரிவாகக்காணக்கூடியதாக இருக்கின்றன. முனிஸ்வரர், காளியம்மன் போன்ற தெய்வங்கள் பொதுவாக கிராம மக்கள் விரும்பும் தெய்வங்களாக உள்ளன. அப்படி அமைக்கப்படும் கோயில்களில் ஏராளமான வெவ்வேறு பெயர் கொண்ட தெய்வ உருவங்களும் சேர்க்கப்பட்டு கோயிலின் சிறப்பைக் கூட்டுவதாக அமைந்து விடுகின்றன.
பொதுவாக முனீஸ்வரன், காளியம்மன் ஆகிய தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு பலி கொடுத்து வேண்டுதல் செய்வது என்பது வழக்கில் இருக்கின்றது. பல்வேறு சடங்குகள், ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் என வைத்து மனிதர் தம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதன் பரிகாரங்களுக்கும் நன்றி செலுத்துதலுக்கும் ஆலயங்கள் மையப்புள்ளியாக அமைந்திருப்பதை தமிழர் மரபிலிருந்து பிரித்து எடுக்க இயலாது.
கொங்கு மண்டலத்தில் உள்ள பல கோயில்களில் தெய்வங்களோடு வரிசையாக பல்வேறு உருவ பொம்மைகளை வைத்து வழிபடும் ஒரு வழக்கமும் நடைமுறையில் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட விசயத்தில் பிரச்சனை என்பது ஒரு மனிதரால் அல்லது ஒரு பொருளால் என அமையும் போது அந்தப் பிரச்சனை தீர்ந்த பின்னர் அந்தப் பிரச்சனைக்கு மூலக்காரணமாகத் திகழும் பொருளை சுதைசிற்பமாக வடித்து கோயில்களில் வைப்பதை இங்கே கோயில்களில் காண்கின்றோம்.
அப்படி ஒரு கோயில் தான் ஈரோடு மாவட்டத்தில், குமாரபாளையம் எனும் ஊருக்கு அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்.
இந்தக் கோயிலில் மக்கள் செய்யும் வழிபாடுகள் பல்வேறு வகையானவை. வேண்டுதலுக்காக ஆணி செருப்பில் நடத்தில், தீமிதித்தல், உருவ பொம்மை செய்து வைத்து நேர்த்தில் கடன் செய்தல், ஆடுகளைப் பலிகொடுத்து நன்றி செலுத்துதல், எலுமிச்சை பழ மாலை அணைவித்து வழிபாடு செய்வது என வெவ்வேறு வகையான வழிபாடுகள் உள்ள வளம் நிறைந்த வழிபட்டு முறைகள் நிறைந்த ஒரு மையமாக இக்கோயில் திகழ்கின்றது.
இப்பதிவில், கோயில் பொறுப்பாளர் இக்கோயில் பற்றி விளக்கம் கூற ஏனையோரும் உடன் இணைந்து கொள்கின்றனர்- வாருங்கள் காண்போம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
திருச்சியைப் பற்றிய விரிவானதொரு நூல் "நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி".
இந்த நூலின் ஆசிரியர் சு.முருகானந்தம் அவர்கள் திருச்சியைப் பற்றிய விரிவானதொரு பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அளித்திருக்கின்றார்.
இந்த நூலின் துணை ஆசிரியர்கள்:
கவிஞர் நந்தலாலா
பைம்பொழில் மீரான்
தி.மா.சரவணன்
ஆகியோர்
இந்த நூல் எழுத ஆர்வம் தோன்றிய காரணங்கள் எனத் தொடங்கி திருச்சி பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் உருவாகிய நிகழ்வையும், நூலின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள தகவல்களையும் பற்றி விவரிக்கின்றார். அதில் சில..
சூளூர் வரலாற்றை ஒட்டி அதே போல ஒரு நூலினைத் திருச்சிராப்பள்ளி தொடர்பில் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்ற இந்த முயற்சி தொடங்கப்பட்டமை
கற்காலம் தொடங்கி, கல்வெட்டு காலம், தற்காலம் வரையிலான செய்திகள்
நதி நீர் வழிகள்
எந்த மத இன, சாதிய சார்பு நிலையும் இல்லாமல் இந்த நூலில் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டிருக்கும் நிலை
பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாறு
ரோபர்ட் நோபிலி பற்றிய செய்திகள்
இஸ்லாமிய தர்கா - சிரியாவிலிருந்து வந்த பெரியவர், அரச பரம்பரையைச் சேர்ந்தவர் திருச்சியில் தங்கி இருந்த நினைவாக உருவாகியிருக்கும் தர்கா
இங்கு வாழ்ந்த சூஃபிகள், பெண் சூஃபிகளுக்கான தர்கா, அங்கு வழக்கில் உள்ள சடங்குகள் என்பன போன்ற தகவல்கள்
அருகன் கோட்டம் பற்றிய சில செய்திகள்
உறையூர் - முற்காலச் சோழர்களின் தலைநகரமாக இந்த நகர் விளங்கியமை
சுதந்திரப் போராட்டம் தொடர்பான செய்திகள் - 1800கள் தொடங்கி யாவர் அதில் ஈடுபட்டனர், சுதந்திரப் போராட்டத்தில் பொது மக்களின் ஈடுபாடு
திருச்சியில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி
பொது உடமைக்கட்சி, தொழிலாளர் போராட்டம்
தூயவளனார் கல்லூரி நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டமை பற்றிய செய்திகள்
திருச்சி ஏன் தமிழகத்தின் தலைநகரமாக அமையவில்லை என்பதற்கான சில கருத்துக்கள்
மாயனூர் - சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் எல்லைக் குறியீடாக அமைந்த சுவரின் எச்சங்கள்
பண்டைய பெருவழி சாலை, மங்கம்மா சாலை,
குடைவரைக் கோயில்கள்
போர்க்களங்கள்
உய்யங்கொண்டான் திருமலை, பொன்மலை பற்றிய செய்திகள்
மகாத்மா காந்தி, காந்தி மார்க்கெட்டில் மகாத்மா காந்தி அடிககல் நாட்டிய செய்திகள், உப்பு சத்தியாகிரகம்
முத்துராமலிங்கத் தேவர் பற்றிய செய்திகள்
திருச்சி தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய செய்திகள்
சைவ சமயக் கோயில்கள் - தென்கலைத் தலங்களில் ஐயர் மலை, கடம்பர் கோயில், பராய்த்துறை, உய்யகொண்டான் திருமலை - கற்குடி, திருமூக்கீச்சுரம், தாயுமானசாமி கோயில், எறும்பேசுவரர் கோயில்
வடகலைத்தலங்களில், ஈய்ங்கோய் மலை - முசிறி, திருப்பைங்கிளி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில், இப்படி பல சைவத் தலங்கள் பற்றிய தகவல்கள்
அரசியார் மீனாட்சி - சந்தாசாகிப் பற்றிய செய்திகள்
தாயுமான சாமிகள்
இங்கு புகழ்பெற்ற காத்தவராயன் கதை
பொன்னர் சங்கர் கதை சொல்லிகள்
...
இப்படி திருச்சியைச் சுற்றி நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
இத்தகைய வரலாற்று நூலை உருவாக்க அதற்காக உழைத்து மிக நல்லதொரு டஹ்மிழ்ச்சேவை செய்திருக்கும் பெரியவர் சு.முருகானந்தம் அவர்களுக்கும், இந்த நூல் வெளிவர பல்வேறு வகையில் உழைத்த ஆர்வலர்களையும் பாராட்டுவது நம் கடமை!
விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றுள் பல, மக்களோடு மக்களாக வாழ்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவர்களால் எழுப்பப்படுபவையாக இருக்கின்றன. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்குப் புராணக் கதைகளும் இணைந்தே அமைந்துவிடுகின்றன.
எத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். ஒரு மையப் புள்ளியை வைத்து தனது கற்பனைத்திறனைக் கொண்டு ஒரு உலகத்தையே படைத்து விடும் திறன் கொண்டவர்கள் தான் கதை சொல்லிகள். கதைகளை சிருஷ்டிப்பவர்கள் மறைந்து விட்டாலும் கூட சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு, சலிக்காமல் ஆனால் இன்னும் வெவ்வேறு இணைக்கதைகளையும் உட்புகுத்திக் கொண்டு வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.
உலகப் பெரும் நாகரிகங்கள் அனைத்திலும் என்ணற்ற புராணக்கதைகள் தோன்றின. இந்திய சூழலில் மட்டுமல்ல. மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட் என பழமைவாய்ந்த பல்வேறு பண்டைய சமூகத்திலும் புராணக்கதைகள் தவிர்க்கப்படமுடியாதனவாக இருக்கின்றன. பொதுவாகவே புராணக்கதைகள் என்பன மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயாஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குத் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள்.
அது மட்டுமல்ல. புராண அவதாரங்கள். சில வேளைகளில் தவறுகள் செய்து, அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள். தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது, என்பன வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.
மனிதரின் கற்பனைக்கு எல்லை இல்லை. யாராலும் தடை செய்ய இயலாத, அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் எதிர்மறை கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.
தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக் கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும் அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.
குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு காப்பியம். எழுத்தாளர் கௌதம சன்னாவின் எழுத்தில் வடிக்கப்பட்ட ஒரு ஆற்றின் கதை.
இந்த நாவலை நான் வாசிக்க நேர்ந்த போது நாட்டார்வழக்காற்றியல் வகையிலான ஒரு வரலாற்றுப் பதிவிற்கு ஒரு நல்ல சான்றாக இந்த நாவல் அமைந்திருப்பதை உணர்ந்தேன்.
இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் குறத்தியாறு தான். வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின் மொன்னேட்டுச் சேரியே இந்த நாவல் நடக்கும் கதைக்களம். குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது . கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து, வழி வழிச் செய்திகளின் அடுக்கில் தன் சிந்தனைகளை நாவலாசிரியர் பதிந்திருக்கின்றார்.
இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள். இன்று அங்காளபரமேஸ்வரி என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர்.
சாமிகள் உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சடங்குகள் நிறைந்திருக்கின்றன.
வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள். கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள் பூஜைகள் திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவில் விவரிக்கின்றார்கள்.
புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.
இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வண ங்கப்பட்டு வரும் நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா.
இத்தகை படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது வரலாற்றுப்பதிவாகவும் வளம் சேர்க்கும் . தொடரட்டும்!
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.
மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.
மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம்.
ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.
இப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இளம் குழந்தைகளுக்கான கல்வி என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்து ஒப்புவித்துத் தேர்வுக்கு தயார் செய்யும் பழக்கத்தை மட்டும் வளர்ப்பதால் ஒரு குழந்தைக்கு முழுமையான கல்வி வளர்ச்சி ஏற்பட்டு விடாது. குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது பாட புத்தகங்களையும் கடந்து அன்றாட வாழ்வியல் விசயங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சுற்றுச் சூழலில் பார்க்கும், கேட்கும் ,அனுபவிக்கும் விசயங்களை ஒதுக்கி விட்டுப் பாட நூல்கள் மட்டுமே அறிவைத் தரும் என நினைப்பது போலியான கனவு மட்டுமே.
இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஆர்வம் அறிந்து அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். பெற்றோருக்கு மட்டும் தான் இந்தக் கடமை உள்ளதா என்பதல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தைகளின் சுய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றலாம். பள்ளிக்கூட பாடத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்கும் வகையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளைத் திட்டமிடலாம்.
அந்த வகையில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு நாள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தாமே முயற்சித்து மிகத் திறமையாக இந்தக் கண்காட்சி முழுமையையும் ஆசிரியர்களின் உதவியோடு செய்திருந்தனர்.
கண்காட்சியில் ஏறக்குறை 500 க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரவர் இல்லங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உழவுக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பண்டைய தமிழர் விளையாட்டுப் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள், என வெவ்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து மாணவர்களே கிராமிய உடையலங்காரங்களுடன் வந்து வயல்களிலும் இல்லங்களிலும் பணி புரிவதை நாடகக்காட்சிகளாக நடித்துக் காட்டினர்.
தமிழர் வாழ்வில் சிறிது சிறிதாக மறைந்து வரும் கிராமிய நடனங்களையும் மாணவர்கள் பாடியும் ஆடியும் காட்டி, கலைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பயணமும் இடம்பெற்றிருந்தது.
கிராமத்து மண் வாசனையை வெளிப்படுத்தும் உணவுப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறத் தவறவில்லை. பலகாரங்களில் இத்தனை வகைகளா என வந்தோரை வியக்க வைத்தன மாணவர்களின் இந்தப் பாரம்பரிய உணவுக் கண்காட்சி.
மாணவர்கள் கல்வி கற்பதோடு பொது விசயங்களிலும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டும் என்று தன்முனைப்போடு செயல்படும் இந்த அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி.புனிதாவும் அவரது துணைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைப் பகுதி பொறுப்பாளரும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியருமான முனைவர் மலர்விழி மங்கை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்கள்.
இந்த நிகழ்வில் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினேன். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது .
அழகுமலர் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தாளாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர். உலக அரங்கில் தமிழுக்கு இடம் பெற்றுத் தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர். 20ம் நூற்றாண்டில் இவரைப் போல உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறொருவருமில்லை எனத் துணிவுடன் கூறலாம்.
இத்தகைய பெரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞரை தமிழுலகம் எளிதாக மறந்து வருவதைக் காண்கின்றோம்.
தனிநாயகம் என்றாலே உலகளாவிய தமிழ் மாநாடுகள் தாம் நம் நெஞ்சத்திரையில் நிழலாடுகின்றன.
ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் ஆய்ந்தறிந்து தமிழில் முதன் முதலாக வெளிவந்த கார்திலா, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு போன்ற அரிய தமிழ் நூற்களைத் தமிழுலகத்துத் தந்தவர் அவர்.
இத்தகைய சிறப்பு மிக்க தனிநாயக அடிகளாரின் அனைத்துப் படைப்புக்களையும் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2000 பக்கங்களில் வெளிக்கொணர்ந்த வரலாற்றுப் பெருமை அருட்தந்தை அமுதன் அடிகளுக்கு உண்டு. இவர் தனிநாயகம் அடிகள் வரலாறு பற்றி இந்த விழியப் பதிவில் விவரிக்கின்றார்.
(குறிப்பு உதவி: தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம் - அமுதன் அடிகள்)
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவில் இருந்த கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. வரையில் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. புவியியல் கணக்கீட்டின்படி க்ரிடேஷஸ் எனப்படும் காலத்தைச் சேர்ந்த கோனிபரஸ் எனப்படும் பூக்காத தாவர வகையைச் சேர்ந்த மரம் இது என்று புவியியல் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மரம் 18 அடி நீளமாகும்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை
இக்கோட்டையின் உள்ளே பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.
கோட்டையின் வாயிற்பகுதியைக் கடந்து உள்ளே செல்லும் முன் விரிவான பூங்கா போன்ற ஒரு பகுதியைக் கடந்து செல்லலாம். இந்தக் கோட்டையைச் சுற்றி பசுமையான சூழல் அமைந்திருக்கின்றது. கோட்டைக்குச் சற்றே அருகாமையில் இருக்கும் கிராமங்களை இந்தக் கோட்டையின் மேற்பகுதியிலிருந்து நன்கு காணமுடிகின்றது. கோட்டையின் சுவர்கள் உருவாக்கப்பயன் படுத்தப்பட்டிருக்கும் கற்கள் மிக உறுதியானவையாகக் காட்சியளிக்கின்றன.
கோட்டையின் கட்டட அமைப்பு ஐரோப்பிய கட்டட பாணியை ஓரளவு ஒத்த வகையில் அமைந்திருக்கின்றது. ஆயினும் இடைக்கிடையே பொறுத்தப்பட்டுள்ள தூண்கள் இந்திய கோயில் கட்டட பாணியை ஒத்தவகையில் அமைந்திருக்கின்றன. இந்தக் கலவையான வடிவமைப்பு இந்தக் கோட்டையை மாறுபட்ட ஒன்றாகவே காட்டுகின்றது.
ரஞ்சன் குடி கோட்டை, திருச்சிக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களில், சிறப்பிடம் பெறும் ஒன்று என்பது மிகையல்ல.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில் தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில் ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,
Reference Grammar of Classical Tamil Poetry
The Earlier Missionary Grammar of Tamil
சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..
இவரது The Earlier Missionary Grammar of Tamil நூல் ஹார்வர்ட் பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தின் வெளியீடாக வந்தது என்பது பெருமைக்குறிய செய்தி.
இந்த விழியப் பேட்டியில்,
தாம் வட அமெரிக்காவிற்கு வந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் போதனா மொழியாக எவ்வகையில் தமிழ் மொழியின் நிலை இருந்தது.
ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராக வந்து தனது கல்வியையும் அமெரிக்காவில் தனது கல்வியைத் தொடர்ந்த தகவல்கள்
வட அமெரிக்காவில் எவ்வகையில் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆசிரியர் அல்லது பேராசிரியர் நியமனம் அமைகின்றது..
என்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.
தொடர்ச்சியாக,
தனது முதல் நூலான Reference Grammar of Classical Tamil Poetry என்ற நூலைப் பற்றியும் அதன் ஆய்வுச் சிறப்பையும் விளக்குகின்றார்.
இவரது The Earlier Missionary Grammar of Tamil பற்றி விவரிக்கும் போது
16ம் நூற்றாண்டு தமிழ் இலக்கண முயற்சிகள்
தன்னை ஒத்த பாதிரிகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற நோக்கில் பாதிரியார் அன்றிக்கு அடிகளார் 1547 - 1549 வரை பரதவ மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய Arte da Lingua Malabar என்ற இலக்கண நூல் பற்றியும், இந்த நூல் உருவான வரலாற்றையும் இதனை முடிப்பதற்குள் ஏற்பட்ட சிரமங்களையும் சுவைபட விளக்குகின்றார்.
இவரது கடந்த ஆண்டு படைப்பாக, மணற்கேணி வெளியீடாக சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற.. என்ற நூல் வெளிவந்தது.
இந்த நூலில் சங்க இலக்கியத்தில் இக்காலத்தில் இருக்ககூடியதாக உள்ள சாதி என்பது வழக்கில் இருந்தமைக்கான சாத்தியமில்லை எனும் தனது ஆய்வுச் சான்றுகளை விளக்குகின்றார்.
வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புக்களோடு இந்த நேர்க்காணல் முடிகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
காடுகளைக் கொன்று நாடாக்கி அனைவரும் வளர்ச்சியை நோக்கி கண்மண் தெரியாமல் முன்னேறிக் கொண்டிருக்கும் அவசரகதியில்.... அசுர வளர்ச்சியில்... ஈரோடு மாவட்டம் செரையாம்பாளையம் என்னும் ஊர் மக்கள் ஓர் மரத்தை வெட்ட வருகின்ற அரசு இயந்திரங்கள், அரசு ஆணைகள், அரசாங்க அதிகாரிகளுக்கு ஏதிராக அந்த மரத்தைக் பிடித்து வெட்ட விடாமல் செய்தனர்.
அந்த மாபெரும் மரம் இருநூறு ஆண்டுகள் கடந்தும் பலதலைமுறைகளுக்கு இளைப்பாறுதலையும் பல உயிரினங்களுக்கு இருப்பிடத்தையும் அளித்துக் கொண்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அப்போராட்டக்களத்திலிருந்து மக்களினூடே மக்களின் சார்பிலிருந்து ஓர் பாடல் கம்பீரமாக ஒலித்தது.
ஆம். சமர்பா. குமரன் எனும் மக்கள் பாடகர் அந்த போராட்டக் களத்தில் தன் பெயருக்கேற்றவாறு மக்கள் எழுச்சிப் பாடல்களை பாடி மக்களை எழுச்சிப் படுத்திக்கொண்டிருந்தார்.
இவரது போராட்ட வாழ்க்கையானது தனது கூலித் தொழிலாளிகளான பெற்றோரிடம் பிறந்ததிலிருந்தே ஆரம்பித்தது தனது 8ம் வயதில் 3வது படித்துவிட்டு 4வது துவங்கும்போது பள்ளியை விட்டு வந்து வாழ்க்கையில் குழந்தைத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றார்.
தனது 13வது வயதில் இவர் பெற்ற வாரக்கூலியான 1.75 ரூபாயை 0.25 பைசா உயர்த்தி ரூ 2.00 தர வேண்டுமென்று சக குழந்தைத் தொழிலாளிகளை இணைத்து நெசவு முதலாளிகளிடம் போராடத் துவங்கியதுதான் இவரது முதல் சமூகப் போராட்டமாக அமைந்திருக்கின்றது.
தனது வாலிபப் பருவத்தில் பொதுவுடைமை மீது காதல் கொண்டு பல்வேறு போராட்ட, அரசியல் நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அங்கெல்லாம் சமூஅக் நன்மைக்காக தனது க்ரலில் பாடலைப் பாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அப்பணி இன்றும் தொடர்கின்றது.
இவரது பொது நல சேவையைப் பாராட்டி மக்கள் பாடகர் விருது, புரட்சி பாடகர், தமிழக கர்த்தார் விருது, மானுடப் பாடகர், எழுச்சிப் பாடல் நாயகர், பாடல் போராளி என பல்வேறு அமைப்புக்கள் இவரைப் பாராட்டி விருதுகள் அளித்திருக்கின்றன.
2016ம் ஆண்டு கனவரி மாதம் தமிழகத்தின் குமாரபாளையத்தில் ஒரு நிகழ்வின் போது இவரைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அப்போது தனது பாடலகளில் சிலவற்றை தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிவிற்காக வழங்கினார். அப்பாடல்களைக் இப்பதிவின் வழி கேட்போமே.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன்.
மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்கி நிற்கின்றன.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்தான்பி என்றும் பின்னர் சைவசம்யத்தின் பால் ஈர்க்கப்பட்டு சைவ சமயத்திற்கு மதம் மாறினால் அக்காலகட்டத்தில் அவன் கட்டிய கற்குகைக் கோயில்கள் மிகச் சிறப்பானவை. மண்டகப்பட்டில் உள்ள மும்மூர்த்தி கோயிலும், சித்தன்னவாசலில் உள்ள சமணர் கோயிலும் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும். அதோடு, பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் மேலும் சில சிவன் கோயில்களையும், மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் பெருமாளுக்கு குடைவரைக் கோயில்களையும் கட்டினான்.
இன்றைய விழியப் பதிவு தளவானூர் குடைவரைக் கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
நாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில் இரண்டு குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன. இம்மலையில் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக் கோயிலும் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மசுவாமி குகைக் கோயிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோயில்களும் கி.பி. 8ம் நூற்றாண்டில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த சோமன் என்னும் அதியேந்திரன் குடைவித்தமையாகும். இவை பின்னர் நாயக்க மன்னன் காலத்தில் மிகச் சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டது.
இன்றைய விழியப் பதிவு இக்கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இலங்கை ஈழ யுத்தத்தில் நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட தமிழ மக்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் அவர்களை இழந்து உயிருடன் இருக்கும் அவர்களது உறவுகளுக்கு அதுவே ஆராத்துயரம். இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கட்டு கொல்லப்பட்டனர். இளம் தமிழ் சிறார்களும் வயது வரம்பின்றி கொல்லப்பட்டனர்.
இந்தப் போர் கொடுமையையும் அது விட்டுச் சென்ற சோகத்தையும் நினைவுறுத்தும் வகையில் தமிழகத்தின் தஞ்சாவூரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பட்டது. முள்ளிவாய்க்கால்முற்றவளாகம் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்தில் அமைந்துள்ளது. 1.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் திகதியன்று இம்முற்றம் திறந்து வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் இனப்படுகொலையை நினைவுறுத்தும் ஒரு இடம். போரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் வலியை உணர்த்தும் ஒரு நினைவாலயம்!
இந்த நினைவாலயத்தின் விழியப்பதிவை வழங்குவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம்.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
இந்தப் பதிவை செய்ய உதவிய தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர்.கந்தன் அவர்களுக்கும், டாக்டர் இரா.காமராசு அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது. சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில் முக்கியமான இடங்கள் எனக்குறிப்பிடப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று.
கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் மிக விரிவான முறையில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கிரானைட் குவாரி உடைப்பு நடந்து இப்பகுதியில் மலைப்பகுதிகள் விக விரிவாக பாதிக்கப்பட்டன என்ற செய்தியை நாம் அறிவோம். இதற்கும் மேலாக இங்கு நரபலி கொடுக்கப்பட்டு மேலும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற செய்திகளையும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. சமூக நலனில் அக்கறைகொண்ட சிலர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளினால் இப்பகுதியில் குவாரி உடைப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும் பெருமளவில் இங்கு இயற்கை வளங்கள் சேதப்படுத்தப்பட்டன என்பதை மறுக்க இயலாது.
உடைக்கப்பட்ட மலைப்பகுதிகளில் எத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் இருந்தன என்பதை கண்டறிய இனி வாய்ப்பேதுமில்லை என்ற போதிலும் மலையின் மற்றொரு பகுதியில் இருக்கும் கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் கி.பி 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் எவ்வகைச் சேதமும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமன்றி பொதுமக்கள் நாம் அனைவருக்குமே உண்டு.
கீழவளவு இயற்கை எழில் கொண்ட ஒரு பகுதி. பெறும் பெறும் பாறைகள் சூழ்ந்திருக்கும் இப்பகுதியில் பண்டைய காலத்தில் அதாவது கி.மு.3ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இங்கே சமணப் பள்ளிகளை அமைத்து மக்கள் மத்தியிலே கல்வியை வளர்த்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தோர் மட்டுமே கல்விக்குத் தகுதியானவர்கள் என்னும் கருத்திற்கு மாற்றாக அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற வகையில் கல்வியை எல்லோருக்கும் வழங்கிய சிறப்பு சமண சமய சான்றோர்களுக்கு உண்டு. ஆண் பெண் ஆசிரியர்கள் என இருபாலருமே ஆசிரியர்களக இருந்து இங்கே பொது மக்கள் கல்வி கற்க வழிவகுத்தார்கள். இங்கே பள்ளிகளை அமைத்தனர். இந்தப்பள்ளிகளே இன்று பள்ளிக்கூடங்கள் என்ற வகையில் கல்வி கற்கும் மையங்களுக்கு பெயராக அமைந்தது.
சமண சமய படிப்படியாக வீழ்ச்சியுற்ற பின்னர் இப்பகுதியில் சமணத்தின் புகழ் குன்றிப் போனது. பின்னர் அச்சணந்தி முனிவரின் வருகையால் இப்பகுதியில் 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் செழிக்க ஆரம்பித்தது.
பாறைக்கு மேற் பகுதியில் நடந்து சென்று தமிழி எழுத்து இருக்கும் பகுதியில் நோக்கும் போது அங்கே பழமையான கல்வெட்டுக்களைக் காணலாம். அதே பகுதியில் மேலே இரண்டு சமண முனிவர்களின் சிற்பங்களும் செய்துக்கப்பட்டுள்ளன. இந்த தமிழி கல்வெட்டு கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திரு.வெங்கோபராவ் என்பவரால் 1903ம் ஆண்டில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இது எவ்வகை எழுத்து வடிவம் என்பது அறியப்படாமலேயே இருந்தது. இக்கல்வெட்டில் சில எழுத்துக்கள் தலைகீழாகவும் சில நேராக இடமிருந்து வலமாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. பாறையின் மேலே உள்ள சமண தீர்த்தங்கரர்கள் வடிவங்களுக்குக் கீழேயும் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது. இது வட்டெழுத்தால் பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்த வட்டெழுத்தில் உள்ள செய்தியானது இந்த இரண்டு சிற்பங்களில் ஒன்றை சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் செய்வித்து நாள்தோறும் முந்நாழி அரிசியால் திருவமுது படைத்து வர வழிவகை செய்ததோடு திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு 50 ஆடுகளும் தந்தார் என்பதைக் குறிக்கின்றது.
இதற்கு வலப்பகுதியில் புதர்கள் மண்டிக்கிடக்கும் பகுதியில் உள்ள பாறை சுவற்றில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிற்பங்களைக் காணலாம். ஆறு சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதே பாறைக்குக் கீழே கற்படுக்கைகள் உள்ளன. இவை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்தக் கற்படுக்கைகளின் மேல் இங்கு வந்து செல்வோர் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கிறுக்கியும் வைத்தும் சிற்பங்களை உடைத்தும் சேதப்படுத்தி வைத்துள்ளனர்.
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும்
தொல்லியல் துறையில் 30 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்தவர். இவரது மாமதுரை, மதுரையில் சமணம் ஆகிய நூல்களில் கீழவளவு சமணற் சிற்பம் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் நன்கு வழங்கப்பட்டுள்ளன. டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவின் போது உடன் வந்திருந்து அரிய பல தகவல்களை நமக்காகத் தெரிவித்தார்
கீழவளவு தமிழகத்தில் தமிழ் மொழியின் பழமையையும் பண்டைய தமிழர் வரலாற்றுச் செய்திகளையும் வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குவாரி நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தால் இப்பகுதியில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொருந்திய பாறைகள் நிச்சயம் சேதப்படும். இது தமிழர் வரலாற்றுக்கு நிகழும் பெறும் சேதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . குவாரி உடைப்பு ஒரு புறம். இங்கே வந்து செல்லும் மக்கள் ஏற்படுத்தும் சேதம் ஒரு பக்கம் . இப்படி பல வகையில் தமிழ் நாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. இந்த வரலாற்றுச் சின்னங்கள் எவ்வகையிலும் சேதமுறாமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது முக்கியக் கடமையாகும்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் கும்பகோணத்தில் உள்ளது. பிற்கால சோழ மன்னர்கள் கட்டிய இக்கோயில் 3ம் குலோத்துங்கன் (கி.பி 1186-1216) காலத்தில் மிக விரிவாக திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விவரங்களை இங்குள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிபேஸ்வரகேஷத்திர கொரநாட்டுக் கருப்பூர் ஷேத்திர மகிமை பகுதி இக்கோயிலைப் பற்றி குறிப்பிடுகின்றது.
இக்கோயிலில் இருக்கும் பெட்டி காளியம்மன் சன்னிதி தனித்துவம் வாய்ந்தது.
எப்பொழுதும் பெட்டகத்தின் உள்ளேயே சுவாமி சிலையை வைத்திருக்கின்றார்கள். மகாகாளியின் உருவச்சிலை உடம்பின் பாதி வரை உள்ள ஒரு சிலையாக உள்ளது. எட்டு கைகள் கொண்ட மகாகாளிச் சிலை இது. அர்ச்சனை நேரத்தில் திறப்பது தவிர ஏனைய நேரங்களில் பெட்டிக்குள்ளேயே மகாகாளியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிக்காளியம்மன் பற்றிய செய்திகளைத் தாங்கி வருகின்றது இன்றைய நமது விழியப் பதிவு.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.
இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாகth தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பை பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது.
இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.
மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதே போல மேலும் பல்லவ காலத்து தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.
இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன.
சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் குகை காணப்படுகிறது.இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்தனர்.
மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன.ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது.
தமிழகத்தில் உள்ளோரே கூட அறியாத ஒரு சிறந்த கலைப்படைப்பாக இது திகழ்கின்றது. எழில் மிகுந்த இந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதி தரும் தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவாக்கியிருக்கின்றோம். இப்பதிவில் ஆய்வாளர் டாக்டர்.ரமேஷ் அவர்கள் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சமணம் என பல தகவல்களை விளக்கிக் கூறுகின்றார்.
இந்த தமிழ் கல்வெட்டுக்கள் பதிவை செய்ய உதவிய நண்பர்கள் டாக்டர்.ரமேஷ், திரு.கோ.செங்குட்டுவன், மற்றும் இணைந்து வந்திருந்த பத்திரிக்கை நிறுபர்கள் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
பேராசிரியர் தொ.ப. அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது ஆய்வுப் படைப்புக்களாக
அறியப்படாத தமிழகம்
பண்பாட்டு அசைவுகள்
தெய்வங்களும் சமூக மரபுகளும்
அழகர் கோயில்
தெய்வம் என்பதோர்
வழித்தடங்கள்
பரண்
சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
சமயங்களின் அரசியல்
செவ்வி (நேர்காணல்கள்)
விடு பூக்கள்
உரைகல்
இந்துதேசியம்
நாள்மலர்கள்
என்பனவோடு புதிய நூல்களாக இந்த ஆண்டு மேலும் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.
தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின் ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.
குறிப்பு: என்னுடன் உடன் வந்திருந்து பதிவுகளில் உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் மதுமிதா, திருமதி யோகலட்சுமி, பேராசிரியர்.முனைவர்கட்டளை கைலாசம் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தில் இருக்கும் பூர்வீகப் பழங்குடி மக்களில் முப்பத்தாறு பிரிவுகளில் இருளர் சமூகத்தினர் ஒரு பிரிவினர். தமிழக மக்கள் தொகை எண்ணிக்கையில் இவர்கள் 1% என்ற நிலையில், கல்வி மற்றும் சமூக ரீதியில் விளிம்பு நிலையில் உள்ள நிலையில் இவர்கள் இருக்கின்றனர். அருகாமையில் இருக்கும் செங்கல் சூலை, அரிசி ஆலைகளில் கொத்தடிமை முறையில் பணி என்ற வகையிலேயே இவர்கள் வாழ்வாதாரம் அமைந்திருக்கின்றது. இவர்கள் தமிழகத்தின் வட தமிழ்நாட்டுப் பகுதியில் மட்டுமே இருக்கும் ஒரு குடியினர். இந்த இருளர் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபடும் சமூக ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்களது விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.
பேராசிரியர் பிரபா.கல்விமணி (69) கல்வியாளர், சமூக ஆர்வலர், மனித உரிமைப் போராளி எனப் பல்வேறு பரிமாணங்களை உடையவர். 1947 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், செளந்திரபாண்டியபுரம் கிராமத்தில் பாலையா-பிரமு என்கிற ஏழை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.
தமது பட்டப்படிப்பை முடித்து 1967 கும்பகோணத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பணியாற்றி பின்னர் 1978 விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்து, பிறகு 1981 திண்டிவனம் அரசுக் கல்லூரிக்குச் சென்றார். முழுநேரப் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 1996 இல் தமது பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா புதுச்சேரி காவல்துறையினர் 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், விஜயாவிற்காக வழக்கு நடத்துவதற்காக செயல்படத்தொடங்கி ‘’பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இருளர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அடையாளமாக திகழ்கின்றார்.
தாய்மொழி வழியான தமிழ் வழிக் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் திண்டிவனம் ரோசனையில் தாய்த் தமிழ் பள்ளியினைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமான கல்வி, மதிய உணவு அளித்துவருகின்றார்.
தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மனித உரிமை, தமிழ் வழிக் கல்வி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயலாக்கம், கல்விச் சீர்கேடுகள், அரசின் தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள், மத நல்லிணக்கம், ஏரிகுளம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான சமூக நோக்கிலான மாநாடுகளைப் பலரையும் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு நகர கல்வி மேம்பாட்டுக் குழு அமைப்பினைத் தொடங்கி நகரில் உள்ள பல்வேறு பிரபலங்களையும் இணைத்து அரசு பள்ளியே இல்லாத திண்டிவனம் நகரின் முருங்கப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டுவந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம் நகரில் நடைபெற்ற தனிப்பயிற்சி மோசடிகளுக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தியவர் இவர். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழிப்போம் என்ற பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து சில ஆண்டுகள் காப்பி அடிப்பதை அரசு தடுப்பதற்கான செயல்களை முன்னெடுத்தவர்.இதன் காரணமாக பலமுறை இவர் பணியிட மாறுதலுக்கு உள்ளிட நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தனக்கான நீதியினைப் பெற்று தொடர்ந்து திண்டிவனத்திலேயே பணியாற்றியவர்,
இறுதியில் முழுநேரமாக சமூகச் செயல்பாட்டில் ஈடுபட 1996 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து 1997 இல் விருப்ப ஓய்வினையும் பெற்றார்.
2000 ஆம் ஆண்டு வீரப்பன் பிடியிலிருந்த கன்னட திரைப்படநடிகர் ராஜ்குமாரை மீட்க அமைக்கப்பட்ட மீட்பு குழுவில் ஒருவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர் இவர்.
கல்வி மேம்பாடு, இருளர் இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஏறக்குறைய 30 நிமிட பேட்டி இது.
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
குறிப்பு: தகவல் குறிப்புக்களை வழங்கிய திண்டிவனம் திரு.ராகேஷ் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
அறச்சலூர் இசைக்கல்வெட்டு தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தனியிடம் பெறும் ஒன்று.
கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் திகழ்கின்றது. இக்கல்வெட்டின் எழுத்துக்கள் பண்டைய தமிழ் எழுத்தான தமிழி எழுத்துக்களால் கீறப்பட்டவை.
அறச்சலூர் என்னும் ஊர் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையில் வலது புரத்தில் நுழைந்து மேலும் சற்று தூரம் வாகனத்தில் சென்றால் ஒரு மலைப்பகுதி வருகின்றது. அந்த மலைப்பகுதி கருவேல மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. இங்கு பாறைகள் நிறைந்திருக்கின்றன. பாறைகளுக்கு இடையே உள்ள குகைப்பகுதிகளில் கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்ததற்கான சான்றாக காணப்படும் சற்றே சிதைந்த நிலையிலான கற்படுக்கைகளையும் இந்த குகைப்பகுதிக்கு முன்னே உள்ள பாறையில் காண முடிகின்றது.
இந்தப் பாறைப்பகுதியின் மேல் அமைந்திருக்கும் குகைப்பகுதியில் தான் பண்டைய தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன.
ஈரோடு கல்வெட்டுத்துறை அறிஞர் எஸ்.ராசு அவர்களால் 1960ல் இந்தக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தக் கல்வெட்டு அமைந்திருக்கும் குகைப்பாறையில் முதலில் னமக்குத் தென்படுவது இசைக்கல்வெட்டு. ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும் ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் அமைந்திருக்கின்றன. கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை கீழ்க்கணும் வகையில் குறிப்பிடுகின்றார்.
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
இந்த இசைக்கல்வெட்டுக்கு அருகில் மேலும் இரண்டு வரிகளிலான தமிழி கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. இதனை வாசித்தளித்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதன் வடிவத்தை
எழுதும் புணருத்தான் மசிய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன் எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது, மசி என்னும் ஊரைச் சேர்ந்த காசு பரிசோதகரான தேவன் ஙாத்தன் இங்கு எழுதப்பட வேண்டிய இசை எழுத்துக்களையும் தொகுத்தளித்தார் எனக்குறிப்பிடுகின்றார்.
இதே கல்வெட்டை ஆராயும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை சுந்தரம் இந்த வாசிப்பை
எழுத்தும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்
எனக் குறிப்பிடுகின்றார். இவரது விளக்கப்படி, மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார். அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என்று திரு.துரை சுந்தரம்குறிப்பிடுகின்றார்.
இந்த இரு கல்வெட்டுக்களும் அருகிலேயே கீறப்பட்ட ஓவியம் ஒன்றும் உள்ளது. இது இரண்டு நபர்கள் நிற்பது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வடிவம் ஆராயப்படவேண்டிய ஒன்றே.
தமிழ் கல்வெட்டு வட்டெழுத்தாக உருமாற்றம் பெருவதை உணர்த்தும் வகையில் அமைகின்ற கல்வெட்டுச் சான்றாகவும் இந்தக் கல்வெட்டுத் தொகுதி அமைகின்றது என்பதை இதனை முதலில் கண்டுபிடித்த பேரா.எஸ்.இராசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இந்த இசைக்கல்வெட்டும் அதனை செய்வித்தவரைப்பற்றியுமான விளக்கக் குறிப்பு கல்வெட்டும் அடங்கிய இப்பகுதி இன்று பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதி என்பதில் சிறிதும் அய்யமில்லை. ஆயினும் தற்சமயம் இந்த கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி பாதுகாப்பற்ற வகையிலே இருக்கின்றது. நாங்கள் நேரில் இக்கல்வெட்டைத்தேடிச் சென்ற போது தமிழகத் தொல்லியல் துறையின் அடையாளக் குறிப்பு அறிவிப்புப் பலகைகளோ எவ்விதக் குறிப்புக்களோ இங்கு இல்லாதததைக் கண்டு மிகவும் மனம் வருந்தினோம். அதுமட்டுமன்றி செல்லும் வழியும் சரியாகப் புலப்படவில்லை. கல்வெட்டு இருக்கும் பகுதிக்கு அருகில் குப்பைகள் நிறைந்தும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே கிடப்பதையும் காணும் நிலை ஏற்பட்டது.
தமிழ் நிலப்பகுதியில் நாம் காணும் பண்டைய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழர் வரலாற்றின் தொண்மையை ஆராய உதவுபவை . அவற்றை முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக முக்கியக் கடமை. இப்பகுதி விரைவில் தமிழக தொல்லியல் துறையினால் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு இங்கு வந்து பார்த்துச் செல்ல விரும்பும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் தகவல்கள் கிடைக்கும் வகை செய்ய வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன.
தமிழகத்தில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள அரிவாள் வகைகள் காடுகளை வெட்ட, விவசாயப் பணிகளுக்காக, தேங்காய் மட்டையை உரிக்க என்பதோடு கிராமிய கோயில்களில் நேர்த்திக் கடன் சார்த்த என வெவ்வேறு வகைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிவாள் என்றால் உடன் நம் சிந்தனையில் தோன்றுவது திருப்பாசேத்தி அரிவாள் அல்லவா? அந்த திருப்பாச்சேத்தி பகுதியில் சந்தைச்சாலையில் இருக்கும் ஒரு அரிவாள் செய்யும் பட்டறையில் அரிவாள் செய்யப்படுவதை இந்த விழியப் பதிவில் காண்போம்.
கால மாற்றத்தில் திருப்பாச்சேத்தி அரிவாள் தொழிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் வன்முறை கலாச்சாரத்தில் பயன்படும் வகையில் இருப்பதாலும் தற்சமயம் அரிவால் பட்டறை நடத்துபவர்கள் சில கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகின்றது. பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையும் பாதுகாப்பான முறையில் அமையவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு அருகிலேயே மணிக்கனக்காக உட்கார்ந்து தான் உருவாக்கும் அரிவாள் ஒவ்வொன்றையும் தட்டி தட்டி செம்மையாக்கும் பனியில் ஈடுபடும் தொழிலாலர்களின் நிலை வருத்தப்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது. இவ்வகை தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் அமைய வேண்டியதை வலியுறுத்த வேண்டியதும் இது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டியதும் அவசியமே.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மதுரைக்கு அருகே அரிட்டாபட்டி என அழைக்கப்படும் ஒரு பகுதியில் இளமைநாயகிபுரம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் கழிஞ்சமலை மலைப்பகுதியில் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டு சமணப் பாறைச் சிற்பமும் அதன் கீழ் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.
1971ம் ஆண்டில் பேராசிரியர். கே.வி.ராமன், டாக்டர்.சுப்பராயலு இருவரும் முதல் தமிழி கல்வெட்டினையும் வட்டெழுத்துக் கல்வெட்டினையும் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் 2003ம் ஆண்டில் ஆய்வாளர்கள் பொ.ராசேந்திரன், சொ.சாந்தலிங்கம் ஆகியோர் இரண்டாவது தமிழி கல்வெட்டினைக் கண்டுபிடித்தனர்.
இங்கிருக்கும் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும் கி.மு 3ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
அதற்கு அடுத்தார்போல சமண தீர்த்தங்கரர் சிற்பமும் வட்டெழுத்தும் பக்திகாலத்திற்க்குப்பின்னர் அதாவது 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் எழுச்சி பெற்ற காலத்தில் பொறிக்கப்பட்டது. சமண மறுமலர்ச்சியை மீண்டும் உண்டாக்கிய அச்சணந்தி முனிவர் இந்த தீர்த்தங்கரர் உருவத்தை செதுக்க வைத்து அதன் கீழ் இந்தக் கல்வெட்டுனைப் பொறிக்கச் செய்திருக்கின்றார். அச்சநந்தி செய்வித்த திருமேனி என்ற குறிப்பும் இந்த மலையின் பெயர் திருப்பிணையன் மலை, ஊரின் பெயர் பாதிரிக்குடி ஆகிய தகவல்களும் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் வட்டெழுத்து என்பது தமிழ் பிராமியிலிருந்து (தமிழி) கி.பி3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கி.பி 13ம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் மிக அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் சோழர் ஆட்சியில் தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக முக்கியத்துவம் பெற்று வளர இந்த வட்டெழுத்து எழுத்து வடிவமோ கேரளப்பகுதியில் பயன்பாட்டில் விரிவடைந்து கிரந்தத்தோடு கலந்து மளையாளமாக உருவெடுத்தது என்ற குறிப்பினை இப்பதிவில் கேட்கலாம்.
தற்சமயம் சமணப் பண்பாட்டு மையம் ஒன்று மதுரையில் உருவாக்கப்பட்டு செயல்படுவதையும், தமிழகத்தின் வட பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் மதுரைக்கு வருவதையும் தங்கள் சமயத்தின் தாயகமாக இவர்கள் மதுரையைக் கருதுவதையும் இப்பதிவில் டாக்டர்.சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார்.
ஏறக்குறைய 11 நிமிடப் பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் கழிஞ்சமலை கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.
இங்குள்ள தமிழி கல்வெட்டுக்களின் இக்காலத் தமிழ் வடிவம்:
1.
நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை
கொடுபிதோன்
2.
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்
இவ்முழ உகைய் கொடுபிதவன்
சிற்பத்தின் கீழ் இருக்கும் வட்டெழுத்து தரும் செய்தி
ஸ்ரீ திருபிணையன் மலை
பொற்கோட்டு கரணத்தார் பேரால்
அச்சணந்தி செய்வித்த திருமேனி
பாதிரிக்குடியார் ரஷை
(கல்வெட்டு குறிப்பு: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்)
விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
இந்த தமிழ் கல்வெட்டுக்கள் பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்
தமிழகச் சிற்பிகளும் கல்வெட்டுக் கலைஞர்களும் தமிழ் மண்ணில் விட்டுச் சென்றிருக்கும் சான்றுகள் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்பவை. கி.மு 6 என்ற கால நிலையிலேயே கல்வெட்டு பொறிக்கும் திறன் பெற்றோராகத் தமிழர் தொழிற்கலை அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாக அமைவது என்பதோடு இக்காலத்திற்கு முன்பே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேச்சு, வடிவம், இலக்கணம் என்ற வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மிக நல்ல சான்றாகவும் அமைகின்றது. கி.மு.5ம் நூற்றாண்டு வாக்கில் மதுரை நகரைச் சுற்றியுள்ள குன்றுகளில் பல சமண முனிவர்கள் தங்கியிருந்தமைக்கானச் சான்றுகளை இன்றும் பாறைகளில் உள்ள படுக்கைகள், தொல் தமிழ் எழுத்துக்கள் என்பனவற்றிலிருந்து அறியமுடிகின்றது. இம்முனிவர்களை அச்சயமம் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆதரித்து, இவர்கள் தங்கவும் பள்ளிகள் அமைத்து கல்விச்சேவை புரியவும் உதவி இருக்கின்றனர். பொருள் வளம் மிக்க வணிகப்பெருமக்களும் சமண முனிவர்கள் குன்றுகளின் பாறைப்பகுதிகளில் தங்கியிருக்க வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய செய்திகளை இப்பாறைகளில் வடிக்கப்பட்டுள்ள தொல் தமிழ் எழுத்துக்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. மாங்குளம், மதுரையிலிருந்து ஏறக்குறைய 20கிமீ.தூரத்தில் இருக்கும் ஊர். ரோவர்ட் சீவல் என்பவர் தாம் 1882ம் ஆண்டில் இங்கிருக்கும் மாங்குளம் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர் என்ற சிறப்பினைப் பெறுபவர். கல்லில் பொறித்த எழுத்துக்களைப் பார்த்து இவை என்ன குறியீடுகளோ என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆயினும் இவை என்ன எழுத்துக்கள் என்பது கடந்த நூற்றாண்டில் தான் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய சமண நெறி சார்ந்த கல்வெட்டுக்களிலேயே இந்த மாங்குளம் கல்வெட்டுக்கள் தாம் மிகப்பழமையானவை என்ற சிறப்பைப் பெறுபவை. இம்மலையில் ஐந்து குகைப்பகுதிகள் உள்ளன. சற்றே தூரத்தில் இடைவெளி விட்டு இவை அமைந்திருக்கின்றன. கற்படுக்கைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வடிய உருவாக்கப்படும் காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே அல்லது அருகாமையில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககால பாண்டிய மன்னனின் பெயர் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருமுறை குறிப்பிடப்படுகின்றன. அதோடு செழியன், வழுதி என்ற பாண்டிய குடிப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டுக்கள்: 1. கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன் கடல் அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளிஇய் 2. கணிய் நத்திய் கொடிய் அவன் 3. கணிய் நந்தஸிரிய் குஅன்தமம் ஈதா நெடுஞ்செழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய் 4. கணி இ நதஸிரிய்குவ(ன்) வெள் அறைய் நிகமது காவிதிஇய் காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன் 5. சந்தரிதன் கொடுபிதோன் 6. வெள்அறை நிகமதோர் கொடி ஓர் (குறிப்பு: பாண்டிய நாட்டு வரலாற்று மைய வெளியீடான மாமதுரை (ஆசிரியர்கள்- பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்) என்ற நூலில் உள்ள குறிப்பு மேலே வழங்கப்பட்டுள்ளன.) தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத எழுத்தும் கலந்த நிலையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தின் சிறப்பு எனச் சொல்லப்படும் ழ எழுத்து வெட்டப்பட்ட பழமையான கல்வெட்டு இவைதாம் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே. இப்பகுதியில் 2007ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் செங்கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கூறைகளுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டமை அறியப்பட்டது. கூறைகளுக்கு இடையே மரத்துளைகள் உருவாக்கி அதனை மரச்சட்டங்களை வைத்து இணைத்து இரும்பினால் ஆன ஆணியை கொண்டு இணைத்து இக்கூறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு கிடைத்த வெவேறு அளவிலான பழங்கால ஆணிகள் இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாங்குளம் கல்வெட்டுப் பகுதி இன்று தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் சின்னமாக இருக்கின்றது. மேலே பாறைக்குச் செல்லும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கைகள் இருக்கும் பகுதிகளில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பெயர்களை எழுதி,இப்புராதனச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குறிய விடயம். அருகாமையில் இருக்கும் குடியானவர்களின் ஆடுகள் இப்பகுதியில் மேய்வதால் ஆட்டுப்புழுக்கைகள் நடைபாதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன. இப்பகுதியை சுத்தம் செய்து பாதுகாக்கும் முயற்சி மிக அவசியம்.
ஏறக்குறைய 20 நிமிடப் பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் மாங்குளம் கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.