மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் உணவுகள் அதிகமாக உணவில் பயன்படுத்தப்படுவதும் இயல்பாகவே உள்ளது. அத்தகைய ஒரு உணவு தான் ஒடியல் கூழ்.
அன்மைய தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் இலங்கை பயணத்தின் போது ஒரு நாள் நெடுந்தீவிற்குச் சென்றிருந்தோம். நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்களது இல்லம் அழகிய இயற்கிய சூழலில் அமைந்த ஒரு குடில். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் ஒருகுடில். அருகிலேயே சமைப்பதற்காக ஒரு தனி கூரை வேந்த குடிலும் இருக்கின்றது. ஒரு தபால் அதிகாரியான இவர் எங்கள் குழுவினருக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து காட்டினார். அவருடன் அவரது துணைவியாரும், தோழி தருமசீலியும் விளக்கங்கள் அளித்தார்.
நெடுந்தீவு முழுமைக்கும் பனைமரம் நிறைந்துள்ளது. காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது. ஒடியல் கூழுக்கு மிக அத்தியாவசியமான பொருள் இந்த ஒடியல் மாவு தான். பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த ஒடியல் கூழுடன் காயவைத்து நறுக்கிய பனங்கிழங்கு உருளைகளையும் உண்ணக்கொடுக்கின்றார்கள்.
இந்தப் பதிவில் இந்த ஒடியல் கூழ் நெடுந்தீவில் சமைக்கப்படுவதைக் காணலாம்.
நன்றி:
திருமதி.தருமசீலி மற்றும் அவரது நெடுந்தீவு நண்பர்கள் திரு.திருமதி கணபதி குடும்பத்தினர்
*கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?* -
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்
சமகாலச் சூழலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு அகழாய்வாகத் திகழ்வது கீழடி அகழாய்வு.
இந்திய நாகரிகம் வடக்கிலிருந்து தோன்றியது என்ற கருதுகோளை மாற்றிய தமிழக அகழாய்வுகளில் கீழடி அகழாய்வும் இணைகின்றது. கொடுமணம், பொருந்தல், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் என நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்திய சிறப்புகளின் தொடர்ச்சியாகக் கீழடி அகழாய்வு தொடர்கிறது. தமிழகத்தின் எந்த நிலப்பகுதியில் அகழாய்வு செய்தாலும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் சங்ககால பண்பாட்டினையும் காட்டும் சான்றுகள் கிடைக்கும் என்கின்றார் பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம். மேலும் அறிந்து கொள்ள பேட்டியை முழுமையாகக் காணவும்.
நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்
*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு*
யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்
அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் 2400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்.புஷ்பரட்ணம் கூறுகின்றார்.
நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்
*இலங்கையில் கண்ணகி வழிபாடு*
-தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல்
தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று.
நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் கண்ணகி கோயில்கள் உள்ளன. இந்தத் தொன்ம வழிபாடு எவ்வகையில் இலங்கைக்குச் சென்றது? அது எவ்வாறு இலங்கை மக்கள் வழிபாட்டுக் கூறுகளில் இடம்பெறுகின்றது என்பதை தொல்லியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விளக்குகின்றார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்.
கண்ணகி வரலாறு புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வழக்கில் இருப்பதை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவ்ர்களுக்கு நல்ல பல தகவல்களை வழங்குகிறது இப்பேட்டி.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் என்பது ஒருபுறம் பெரிய கோயிலும், மறுபுறம் புனித போதி மரமும் என இரு பெரும் பிரிவுகள் கொண்ட ஒரு வழிபாட்டு வளாகம். வெண்ணிற ஆடையணிந்தது வழிபாட்டிற்காகத் தினமும் பலநூறு பக்தர்கள் வருகை தரும் சிறப்புப் பெற்ற புத்த தலம்.
ஆலயத்தின் ஒரு பகுதியில் இங்கு வழிபாட்டிற்கு வருவோருக்குச் சடங்குகளாகக் கையில் வெள்ளை நிறக்கயிறு கட்டப்பட்டு, நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவது ஒரு வழிபாட்டுமுறை. பக்தர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. கோயிலில் வழிபாடு நடக்கும் பொழுது மங்கல இசை வாசிக்கப்பட்டு அவற்றுடன் பாளி மொழி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.
கோயில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடந்த சுவடுகளும் காணக்கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து அசோகப் பேரரசரின் மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் பௌத்த மதம் பரப்பும் நோக்கில் அரசர் உத்தரவின் பேரில் இலங்கைக்கு வந்த பொழுது, புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்குக் கொணர்ந்து வளர்த்த மரம் என இங்குள்ள மரத்தின் வரலாறு அறியப்படுகிறது. இம்மரம் இன்றும் வழிபடப்படுகிறது.
இது குறித்த தகவல்களை எழுத்தாளர் திரு. கௌதம சன்னா அவர்கள் இக் காணொளியில் விளக்குகிறார். மஹா போதி வரலாறு குறித்து விளக்கமளித்த எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்
THFi - Jaya Sri Maha Bodhi - Anuradhapura
அண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது. இவர் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை என்ற கருத்தில் 'Mirror of Tamil and Sanskrit' என்ற ஆங்கில நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில், பரத நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள் இவை என இந்த நூலில் குறிப்பிடுகின்றார். அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட ‘Thirukkural - An Abridgement of Sastras’ என்னும் நூலில் திருவள்ளுர் தர்மசாத்திரம், அர்த்த சாத்திரம், நாட்டிய சாத்திரம், காம சாத்திரம் ஆகிய வைதீக சாத்திர வேதமரபின் நூல்களின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார் என்றும், திருக்குறள் நால் வருண முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், பிராமணர்களை வள்ளுவர் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார் என்றும் குறிப்பிடுகின்றார். அது மட்டுமன்றி பண்டைய தமிழ் தொல் எழுத்துக்கள் வட மொழி பிராமியிலிருந்து பெறப்பட்டவை என்றும் கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அவை தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன என்றும் உண்மைக்கு எதிரான கருத்துக்களைk குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தொல்லியல் அறிஞர் டாக்டர்.சாந்தலிங்கம், முனைவர் தமிழண்ணல், முனைவர் நடன காசிநாதன்; முனைவர். க. நெடுஞ்செழியன் போன்றோர் கண்டனங்களை பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு தனது கருத்துக்களைப் பதிகின்றார்.
டாக்டர் நாகசாமியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்கும் தற்கால கருத்துக்களுக்கும் உள்ள முரண்பாடு
வேதங்கள் அமைந்த மொழி எது
தமிழ் எழுத்துக்களுக்கு முன்னர் சமஸ்கிருதம் தோன்றியதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை
வடமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்னும் அவரது கருத்துக்கள்
சமஸ்கிருதம் எப்போது எந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது
பிரம்மசத்திரியர்கள் எனப்படுவோருக்கும் பிராகிருதம் சமஸ்கிருதத்திற்குமான தொடர்பு
இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
இறந்த வீரனுக்காக மக்களால் எழுப்பப்படுபவை நடுகற்கள். நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பை குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது.
இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும், கிபி 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவ ஆட்சி காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.
இரண்டு பகுதிகளாக அமைந்த பேட்டியின் இறுதிப்பகுதி பகுதி இது.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் உருவாகின என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது. இப்பேட்டியில் அதனை மறுக்கின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன்.
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களை அறிவியல் ரீதியாக ஆராயும் போது தமிழி எழுத்துக்கள் கி.மு.6க்கு முற்பட்டதாக இருப்பதையும் மக்கள் மொழியாக தமிழி வழக்கில் இருந்தமையையும் காண்கின்றோம். பேட்டியைக் காண
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது.
இந்தப் பதிவில்
சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு
முருகன் - மக்கள் தலைவன்
கல்லினால் செய்யப்பட்ட வேல்
சுடுமண் உருவங்கள்
வைதீகம் உள்வாங்கிய முருகன்
வைதீகத்தின் தாக்கத்தால் புராணக்கதைகள் முருகனுக்கு தெய்வயானையை இணைத்த செய்தி
இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சங்க கால குருநிலமன்னனாகிய பேகனின் பகுதியாக கருதப்படுகின்ற பொதிகையில் (பழனிக்கு அருகில்) பொருந்தல் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் நெல்மணிகள் வைக்கப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு 490 என இதனை ஆராய்ந்த அறிஞர்கள் கால நிர்ணயம் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல.. இங்கு கண்டெடுக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருட்கள் ஆச்சரியம் தரும் தகவல்களை வழங்குகின்றன. பேட்டியைக் காண
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழகத்தின் கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறை சாற்றும் நோக்கத்தில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு ஆய்வாகளாகும்.
கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கள ஆய்வுகளில் முதலில் பெருங்கற்கால பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புலவர் இராசு அவர்களின் கள ஆய்வுகள் கொடுமணல் நாகரிகத்தின் தொண்மையை வெளிக்கொணர்ந்தன. அதனைத் தொடர்ந்து டாக்டர்.க.ராஜன் இப்பகுதியில் பல கள ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அங்கு 120க்கும் மேற்பட்ட தொல்லியல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சுப்பராயுலு அவர்களுடன் இணைந்து கொடுமணலில் ஆய்வுகள் தொடரப்பட்டன. பின்னர் 1990க்குப் பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.க.ராஜனின் தலைமையில் இங்கு தொல்லியல் அகழ்வாய்ப்பணிகள் தொடர்கின்றன.
இந்தக் கள ஆய்வுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா முழுமைக்குமான அகழாய்வுப் பணிகளில், மிக அதிகமாகத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணிலில் தான் கிடைத்துள்ளன.
கரிமச் சோதனைகள் இப்பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் கி.மு 5ம் நூற்றாண்டு பழமையானவை என்பதை நிரூபிக்கின்றன.
பண்டைய வணிகப் பெருவழிகளைப் பற்றிய விரிவான பல சான்றுகள் இந்த ஆய்வுகளில் கிடைத்துள்ளன.
இப்படி மேலும் பல சுவாரசியமான அகழ்வாய்வுச்செய்திகளை நம்மிடம் பகிர்கின்றார் தொல்லியல் அகழ்வாய்வு அறிஞர் டாக்டர்.க.ராஜன்.
தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் தமிழர் நாகரிகத்தின் தொண்மையைக் கீழடி அகழ்வாய்வுகளுக்கு முன்னராகவே வெளிப்படுத்திய பெருமை கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, அழகன்குளம், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் சான்று பகர்கின்றன. ஆயினும் கூட இவ்வாய்வுச் செய்திகள் விரிவாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே உள்ளது.
தமிழகத்தின் கொடுமணல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொல்லியல் பகுதி.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
வரலாற்று ஆய்வு என்பது மன்னர்களின், பேரரசுகளின் வெற்றிகளையும், அவர்கள் பற்றிய நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு என்பது மட்டுமே என்ற எண்ணம் பெரும்பாலும் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை, சமகால நிகழ்வுகள், குடிகளின் விவசாய மற்றும் தொழில் செயற்பாடுகள், சடங்குகள் வழிபாடுகள், பிற இனங்களின் வருகை, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படுகின்றன என்பது நம் முன்னே நிற்கும் கேள்விகள்.
சமூக விஞ்ஞானி பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். "ஆராய்ச்சி" காலாண்டிதழின் ஆசிரியர். தோழர் நா.வானமாமலை அவர்களின் சிந்தனை மரபினர். சமூகவியல் மானுடவியல் பார்வையில் களப்பணிகளின் வழியாக தமது ஆய்வினை நிகழ்த்தி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நூல்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கிய அறிஞர்.
இவருடனான தமிழ் மரபு அறக்கட்டளையின் நேர்க்காணலில்
சமூகவியல் ஆய்வுகள்
அடித்தள மக்களின் வரலாற்று ஆய்வு
தமிழகத்தில் சாதி
தமிழகத்துக்கு ஐரோப்பியர் வருகை
திருநெல்வேலியில் பாதிரியார் ரெய்னுஸ் அவர்களின் சமூகச் செயல்பாடு
தமிழகத்தில் கிருத்துவ மதத்தில் ஏற்பட்ட சாதிப்பாகுபாடு
மாடவீதியின் பின்னனி
மன்னர்களின் வரலாறு சொல்லும் செய்திகள்
...
எனப் பல கோணங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
விழியப் பதிவு உதவி: திரு.செல்வம் ராமசாமி, ( THFi மதுரை)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி ( THFi கலிபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
இலங்கையின் மிக நீண்ட ஆறு என போற்றப்படும் மகாவலி ஆற்றின் கரையில் பேராதனை நகரில் அமைந்திருக்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகம். 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பல்கலைக்கழக வளாகத்தை இது கொண்டுள்ளது. கண்டியிலிருந்து ஏறக்குறைய 10 கிமீ தூரத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் காப்பித்தோட்டமாக இருந்த பகுதி இன்று உலகத் தரம் வாய்ந்த மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை நூலகராகப் பணிபுரியும் திரு.மகேஸ்வரன்
-இப்பல்கலைக்கழகத்தின் தோற்றம்
-இதன் அமைப்பு
-நூலகத்தின் தமிழ் நூல்கள்
-இங்கு அடித்தளத்தில் பாதுகாக்கப்படும் இலங்கையின் மிக முக்கியமான ஆவணங்கள்
-மிகப் பாதுகாப்பாக உள்ள பௌத்த சுவடிகள்
-அரிய தமிழ் சஞ்சிகைகளின் தொகுப்புக்கள்
..எனப் பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்கின்றார்.
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்ச புராணத்தின் அடிப்படையில் காட்டு மிருகமான சிங்கத்திற்குப் பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயன். இவனே இலங்கையின் முதல் மன்னன் என இப்புராணம் கூறும். சிங்கபாகுவின் நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் இந்தப் பல்கலக்கழகத்தில் பணியாற்றியவர். உலக அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்களின் அனைத்து ஆவணங்களும், இந்தப் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு அறையில் தனி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் இந்த நூலகத்திற்கு உள்ள ஒரு சிறப்பு.
நூலகத்தின் அடித்தளத்தில் சுரங்கப் பகுதியில் ஒரு தனி அறை உள்ளது. இங்கு மிக அரிய சுவடிகளும் ஆவணங்களும் செப்பேடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. 5200 சுவடி நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள சுவடிகள் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம், தாய்லாந்தின் தாய் மொழி என பல மொழிகளில் அமைந்தவை.
தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் இலங்கை மன்னர் பரம்பரையில் நாயக்க மன்னர்களின் கலப்பு அதிகமானது. அச்சமயம் பௌத்த சமயம் அதன் முக்கியத்துவம் இழந்தது; வைணம் தழைக்கத் தொடங்கியது. பின்னர் பௌத்த சமயத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாய்லாந்திலிருந்து திரிபிடகம் கொண்டுவரப்பட்டு மீண்டும் இலங்கையில் பௌத்தம் தழைக்கத் தொடங்கியது. அப்போது கொண்டு வரப்பட்ட அந்தத் திரிபிடக சுவடி நூல் இன்று இந்தப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னன் ராஜசிங்கன் காலத்து செப்பேடுகள் சிலவும் இந்த ஆவணப்பாதுகாப்பு அறையில் உள்ளன. இவை பெரும்பாலும் மன்னர் பலருக்கு அளித்த விருதுகளை விவரிப்பதாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட செப்பேடுகளாகும்.
பேராதனைப் பல்கலைக்கழ நூலகத்தில் இன்றைய எண்ணிக்கையின் படி ஏறக்குறைய 8 லட்சம் நூல்கள் உள்ளன. அவற்றுள் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களும் அடங்கும். இலங்கையில் வெளியிடப்படுகின்ற நூலின் ஒரு பிரதி இந்த நூலகத்தின் சேகரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
உதவி : பேரா.முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
அக்ட் 2, 2018
நுவரெலியாவில் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கிய எமது பயணத்தின் இடையே ஒரு ஆவணப்பாதுகாப்பகம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகர்.திரு.மகேஸ்வரன் தெரிவிக்க, அதனை அறிந்து கொள்ள தொடர்ந்தது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணம்.
பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி வாக்கில் இறங்கினோம். எங்களுக்காக ஆட்டோ வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார் ஒரு நண்பர். அவர் வேறு யாருமல்ல. அந்த ஆவணப்பாதுகாப்பகத்தின் அதிகாரி திரு. சந்தனம் சத்தியனாதன். அவரோடு ஆட்டோவில் ஏறக்குறைய 30 நிமிட பயணம். பசுமை எழில் நிறைந்த பகுதியில் கரடு முரடான சாலை. எங்கள் பயணம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே வழியில் சந்தித்த பெண் ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் பதிவினையும் சேர்த்துத் தொடர்ந்தது.
கி.பி.19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாது உயிர் வாழ புதிய நிலங்களுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இலங்கையின் மலையகப்பகுதிக்கு வந்தனர். கடுமையான பல இன்னல்களைச் சமாளித்து காடுகளில் நீண்ட தூரம் கால்நடையாகவே பயணித்து மலையப்பகுதிகளுக்கு வந்தனர். முதலில் காப்பித் தோட்டங்களில் பணியில் ஈடுபட்டனர் இந்த மலையகத் தமிழ் மக்கள். காப்பித் தோடங்கள் பாதிக்கப்பட்டபோது தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. புதிய நிலத்திற்கு வந்தாலும் இங்கும் பல்வேறு இன்னல்களின் தொடர்ச்சி அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கவில்லை. அப்படி வந்து இலங்கையின் கணிசமான மக்கள் தொகையாக இன்று நிலைபெற்று விட்ட இந்திய வம்சாவளி தமிழர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. முறையான ஆவணப்படுத்தலின் அவசியத்தை உணர்ந்து மலையகத் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திருக்கின்றது இங்குள்ள தேயிலைத் தோட்ட அருங்காட்சியகம். இலங்கையின் மலையகத்தில் நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. சந்தனம் சத்தியனாதன் இந்த விழியப் பதிவில் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் மலையகத்திற்குத் தமிழக மக்கள் தொழிலுக்காகப் புலம் பெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கின்றார்.
புதிய வாழ்க்கையைக் கடினமான சூழலில் அமைப்பது எளிதல்ல. சொந்தங்களை இழந்து வாழ்வா சாவா என்ற சூழலிலேயே தினம் தினம் அன்று வாழ்ந்த அம்மக்களின் வாழ்க்கைச் சூழலில் இன்று படிப்படியாக சில மாற்றங்கள் வந்துள்ளன. ஆனாலும் நிவர்த்திக்கப்படாத பல அடிப்படை தேவைகள் அப்படியே இன்றும் தொடர்வது தான் அவலம்.
மலையகத் தமிழர்கள் பற்றிய வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இந்த விழியப் பதிவு பல தகவல்களை வழங்குகிறது.
விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத் தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு
மற்றும் கலந்து கொள்ள வந்திருந்தோரது கருத்துக்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும், பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.
நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.
தமிழர் உலகெங்கும் சிறுபான்மையர். அது ஒரு வகையில் நல்லதே. இவன் பிழைக்க வேண்டி புத்திசாலியாக இருக்கிறான். இயற்கைத் தேர்வின் அழுத்தம் இவன் மீது கூடுதலாகவே பாய்கிறது. அவ்வாறு இருக்கையில் இவனது இருப்பு என்பது தனக்கு சாதகமான தகவலை அறிந்து கொள்வதில் இருக்கிறது. இவனோ பல்வேறு தொன்மங்களைத் தானே உருவாக்கிக்கொண்டு இரண்டாம் தர, மூன்றாம்தரக் குடிமகனாக வாழத் தலைப்படுகிறான். இது தாழ்வு மனப்பான்மையால் விளைவது. இன்னொரு புறம் இதற்கு எதிர்வினையாக சினிமா பாணியில் ஒரு டெரர் இமேஜை உருவாக்கவும் முயல்கிறான். எத்தனையோ கல்விமான்களை உருவாக்கிய தமிழ்ச் சமுதாயம் ஒரு பண்பட்ட சமூகம் எனும் இமேஜைத் தருவதற்குப் பதில் டெரர் இமேஜைத் தருகிறது. இதுவும் பிழை.
மலேசியத் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக எல்லா உரிமையையும் குடியுரிமைச் சாசனம் வழங்குகிறது. ஆனால் அதை அறிந்து கொண்டு கேட்டுப் பெரும் திறமை, ஆளுமை கொண்ட தலைமை இங்கில்லை. அங்காலாய்த்துப் பயனில்லை. இதை மாற்ற வேண்டும். இளைய சமுதாயத்தை உரிமை அறிந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். புதிய தலைமையை உருவாக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் "அறிவொளி இயக்கம்". இது " அறிவொளி அரங்கங்கள்" மூலம் செயல்படும்.
தமிழனுக்குள்ள அடுத்த பிரச்சனை தன் மரபு பற்றிய தவறான புரிதல். பல்லின வாழ்வில் நமது வேர்களைப் பற்றிய தெளிவு முழுமையாய் இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுள் ஒருவர். அவர் உருவமற்றவர். சிலையைக் கும்பிடுவது தவறு என்பது போன்ற பிற சமய ஆளுமை உள்ள நாட்டில் ஏன் தமிழன் பல தெய்வங்களை வழிபடுகிறான்? ஏன் நமக்கொரு திருக்குரானோ? விவிலியமோ இல்லை? இதற்கெல்லாம் பதில் தெரிந்திருக்க வேண்டும். தைப்பூசத்தில் அலகு குத்தி ஆட்டம் போடுவது, பியர் பாட்டிலை முதுகில் குத்தி காவடி எடுப்பது போன்ற செயல்கள் நமது இமேஜை இன்னும் கேவலப்படுத்துமே தவிர உயர்த்தாது.
தமிழ் மரபு என்ன? அதை எப்படித் தேடிக் காண்பது? நல் வழிகாட்டிகள் யார்? இதுவும் அறிவொளி அரங்கத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ் மரபு அறக்கட்டளை, மலேசியக்கிளை இத்தேவைகளை அறிந்து இந்த இயக்கத்தை பிற இயக்கங்களோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது காலத்தின் தேவை.
மலேசியத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் செல்வி. சரஸ்வதி கந்தசாமி நாடறிந்த சட்ட ஆலோசகர், வழக்குறைஞர். சமூக ஆர்வலர், அரசியல் சிந்தனையாளர். இவர் தமிழன் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட நுணுக்கங்களை அறிவொளி அரங்கில் விளக்குவார்.
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை 2001 ல் கோலாலம்பூரில் தோற்றுவித்து முனைவர் சுபாஷினியுடன் தலைமையேற்று கடந்த 20 வருடங்களாக நடத்தும் நான் தமிழ் மரபு பற்றியத் தெளிவைத் தரவுள்ளேன்.
அறிவொளியரங்கம் ஓர் திறந்த மேடை. "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதை மட்டும் முன் வைத்து நடத்தப்படும் இயக்கம். மக்களின் பங்கேற்பும், கலந்துரையாடலும் மிக அவசியம். இதைத் தேசிய அளவில் பல்வேறு ஊர்களில் நடத்த ஆவல். பிற அமைப்புகளின் தோழமை வேண்டப்படுகிறது. செம்பருத்தித் தோழர்கள் நமது முதல் அரங்கை ஜோகூர் பாரு (ஸ்கூடாய்) வில் நடத்த முன் வந்துள்ளனர்.
உங்கள் ஆதரவு தேவை. அறிவுற்ற சமுதாயமே நாளைய உலகை ஆளும். தமிழின் வேர்கள் ஆழமானவை, அறிவு பூர்வமானவை. வேர் கொண்டு விண்ணெழுவோம்!
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத் தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு
தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும், பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.
நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத் தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் இடம்பெறுபவை
-நாகர்கோயில் முரசு கலைக்குழுவினரின்பறையிசை
-திரு.கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) வழங்கிய வாழ்த்துரை
-முனைவர்.க.சுபாஷிணி வழங்கிய தலைமையுரை
-ஆரணி நாளந்தா கலைப்பண்பாட்டுக் குழுவினர் வழங்கிய பனுவல் வாசிப்பு
பள்ளிப்படை கோயில் என நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். இறந்து போன மன்னர்களின் உடலை தக்க சடங்குகளுடன் அடக்கம் செய்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து தனித்துவம் நிறைந்த சடங்குகளை நிறைவேற்றி அமைப்பதுதான் பள்ளிப்படை கோயில். அந்த வகையில் ஒரு சோழமன்னனின் பள்ளிப்படை கோயில் பற்றியது தான் இன்றைய பதிவு.
வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி" என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. இந்தக் கோயிலிலும் இதற்கு எதிராக அமைந்துள்ள மற்றொரு கோயிலிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய வரலாற்றுப் பயணத்தில் இந்தக் கோயிலுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது. உடன் வந்திருந்த தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற ஆய்வாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் இக்கோயிலைப் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.
இரண்டு கோயில்களைப் பற்றிய விளக்கங்களையும் இப்பதிவில் தொகுப்பாகக் காணலாம். கோயில் கலைக்கு எடுத்துக் காட்டுக்களாக இந்த இரண்டு கோயில்களுமே அமைகின்றன. தெளிவான கட்டுமானமும் சிற்பங்களின் நேர்த்தியும் பார்ப்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
ஓவியம் - வின்சி (குமரகுருபரன்)
யூடியூபில் காண: https://youtu.be/Qyp03UZsY-g
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் ஆற்காடுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது.
ஆற்காடு நகர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் தென்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் நகரங்களுள் ஒன்று ஆற்காடு. இன்று ஆற்காடு என்றால் மக்கன் பேடாவும் ஆற்காடு பிரியாணியும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம்.
கி.பி. 17ம் நூற்றாண்டில் மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் நவாப் மன்னர்களை நியமித்திருந்தார். அந்த வகையில் ஆற்காடு பகுதியில் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நவாப் சுல்பிக்கார் அலி. இவருக்குப் பின் தொடர்ச்சியாக நவாப் தோஸ்த் அலி கான் மதுரை வரை தனது ஆட்சியை விரிவு படுத்தினார். அதன் பின்னர் 1749ம் ஆண்டு முகமது அலி கான் வாலாஜா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிகாலமான 1765ல் மொகலாய அரசுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தி நவாப் மன்னர்களின் ஆட்சியை சுதந்திர ஆட்சியாகப் பிரகடனப் படுத்திக் கொண்டார். இவர் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரெஞ்சுப் படைகளுக்குமிடையே நிகழ்ந்த போர் முக்கியமானது. கிழக்கிந்த கம்பெனியாரிடம் படிப்படியாக ஆற்காடு ஆட்சி சென்றடைந்தது. இன்று நவாப் மன்னர் பரம்பரையினர் சென்னையில் ஆற்காடு இலவரசர் என்ற பட்டம் தாங்கி வாழ்கின்றனர்.
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் வடக்கே மொகலாயா சாம்ராஜ்யம் அமைந்துள்ள டெல்லியை நோக்கியவாறு ஆற்காடு டெல்லி கேட் அமைக்கப்பட்டது.
டெல்லி கேட் பகுதியில் 1783ம் ஆண்டு திப்பு சுல்தானால் தாக்கி அழிக்கப்பட்ட முதன்மை பாதுகாப்பு அரண்களின் அடித்தளப்பகுதிகள் அப்படியே காணக்கிடைக்கின்றன.
இந்தப் பதிவில் ஆற்காடு நவாப்களின் வரலாறு பற்றிய விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் வழங்குவதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்குப் பின்னர் நமது குழுவினர் சென்ற ஊர் திருவலம். பொன்னியின் செல்வன் வரலாற்று நாயகன் வந்தியத்தேவன் பிறந்த ஊர். இங்கு ஓடும் பாலாறு இன்று நீரின்றி காய்ந்து மணல் நிறைந்து காணப்படுகிறது.
இப்பதிவில்
திருவலம் (திருவல்லம்) வில்வநாதேசுவரர் கோயில்
இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள்
வில்வநாதேசுவரர் கோயிலில் உள்ள 39 கல்வெட்டுக்கள்
இங்குள்ள கற் தொட்டியும் அதில் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்களும்
வலம்புரி விநாயகர்
வில்லோடு தோன்றும் வேடர் குலப் பெண் சிற்பம்
உடுக்கையுடன் காட்சியளிக்கும் கங்காள மூர்த்தி
கங்காள மூர்த்தி சிற்ப உருவத்தின் விளக்கம்
என இன்னும் பல செய்திகள்..
மிக விரிவாக இவற்றை தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, நம் வரலாற்றின் சில பகுதிகளை அறிவோம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.
அங்கு மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின் எதிர்புரத்தில் சிதலமடைந்த ஒரு கோயில் உள்ளது. அதில் ஐரோப்பியர் தோற்றத்தில் கோபுரத்தில் காணப்படும் உருவங்கள், புடைப்புச் சிற்பமாக பிள்ளையார் என இக்கோயில் காட்சியளிக்கின்றது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லாத, ஆனால் மக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு கோயிலாக இது உள்ளது.
இதற்கு சற்று தூரத்தில் மகேந்திர தடாகம் உள்ளது. அன்று நீர் நிறைந்து விவசாய வளம் செழிக்க ஆதாரமாக இருந்த மகேந்திர தடாகம் இன்று நீரின்றி காய்ந்து பாலைவனம் போலக் காட்சியளிக்கின்றது. மிக விரிவாக தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் இந்த தடாகம் பற்றி விளக்கமளிப்பதை இப்பதிவில் காணலாம்.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, மகேந்திரவாடியின் வரலாற்றை அறிவோம்.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.
mahen.jpg
வீரத்திலும், கலைகளிலும், இலக்கியத்திலும் தடம் பதித்தவன் பல்லவ மாமன்னன், மகேந்திரவர்மன். அவன் பெயர் சொல்லும் குடைவரைக் கோயில்களில் மகேந்திரவாடி தனிச்சிறப்பிடம் பெறுகின்றது.
மகேந்திரவாடி - குடைவரைக் கோயிலின் வரலாறு, இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள், கோயிலின் கட்டுமான அமைப்பு பற்றி விரிவாக விளக்குகின்றார் ஓய்வு பெற்ற தமிழகத் தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்.
இக்குடைவரையில் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களையும் இந்த விழியப் பதிவு காட்டுகின்றது. புராதனச் சின்னங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில்லாத சூழலில் தமிழக கட்டுமான அதிசயங்கள் பாதிக்கப்படுவது தொடர்வது வேதனையே.
வரலாற்றினை தொல்லியல் அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் கற்பதும் அறிதலும் தேவை. அதனையே தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பயணம் சாத்தியப்படுத்தியுள்ளது.
விழியப் பதிவை முழுமையாகக் கண்டு, ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலின் வரலாற்றை அறிவோம்.
செய்யாறுக்கு அருகில் உள்ள பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் மேல் புதுப்பாக்கம் என்ற சிற்றூரில் அண்ணாமலையார், அலமேலு அம்மையார் தம்பதியருக்கு 27.1.1890 மகனாகப் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. பிறந்தபோது இவருக்கு வைக்கப்பட்ட பெயர் முனிசாமி. பள்ளியில் சேரும் போது வைக்கப்பட்ட பெயர் சிகாமணி.
கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காடு மிஷனரி பள்ளியில் ஆரம்பக்கல்வியும் திண்டிவனம் ஆற்காடு மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பும் முடித்தார். கிருத்துவப் பள்ளியில் படித்தாலும் அவர் தீவிர சைவராகவே இருந்தார்.
மெய்யறிவு தாக்கம் கொண்ட சகஜானந்தா 1916ல் சிதம்பரம் ஓமக்குளக் கறையில் நந்தனார் பள்ளியையும் பிறகு ஒரு சைவ மடத்தையும் அதனுள் ஒரு சிவாலயத்தையும் தோற்றுவித்தார்.
முதலில் 50 மாணவர்களும் 50 மாணவிகளும் இணைந்தனர். நந்தனார் கல்விக்கழகம் பல இடங்களில் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கியது. இதனால் சிதம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற உதவினார்.
1926ல் சென்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதி திராவிட மகாஜன சபை மற்றும் நீதிக் கட்சியிலும் பங்கேற்றார். 11.9.1927 இவருடைய நந்தனார் மடத்திற்கு காந்தி வருகை தந்தார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்குக் கல்வி மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையோடு பணியாற்றினார்.
சிதம்பரம் கோயிலில் நந்தனார் வாயிலைத் திறப்பதற்கான போராட்டங்களை மேற்கொண்டார். அதன் நினைவாக இன்றும் அவர் நிகழ்த்திய போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்படுகின்றது.
இவரது கல்விச் சேவையைப் பாராட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரை நிரந்தர செனட் உறுப்பினராக அமர்த்தியது.
இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சைவ சமய தோத்திரங்களான பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கியதோடு பல நூல்களையும் இயற்றிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த ஊர் திருநாரையூர். இது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது இந்தச் சிற்றூர். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்றவராக நம்பியாண்டார் நம்பி அறியப்படுகிறார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் அரசனின் ஆதரவுடன், சிலைவடிவில் தேவார மூவரைத் தில்லையில் எழுந்தருளச் செய்து, அங்குக் கோயிலிலிருந்த தேவாரத் திருமுறைகளை மீட்டெடுத்துத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
சிதம்பரம் நடராஜபெருமான் கோவிலில் ஒரு பூட்டப்பட்ட அறையில் தேவாரத் திருமுறைகள் அடைந்து கிடைந்தன. கவனிப்பாரற்று செல்லரித்துப் போன நிலையில் இருந்த தேவார ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பிகள் மாமன்னன் ராஜராஜனின் ஆதரவுடன் வெளிக்கொணர்ந்து செல்லரித்தவை போக எஞ்சியவற்றை பாதுகாத்து அவற்றை உலகுக்கு அளித்தார். தேவாரப் பாடல்களை எழுதிய மூவர் வந்தால் மட்டுமே அந்த ஓலைச்சுவடிகளை வழங்குவோம் என தடுத்து நின்ற சிவாச்சாரியார்களை தந்திரமான முறையில் எதிர்கொண்டு தமிழ்தோத்திரங்களை உலகறியச் செய்தனர் நம்பியாண்டார் நம்பிகளும் மாமன்னன் ராஜராஜனும்.
அத்தகைய சிறப்பு பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் பிறந்து வளர்ந்து சைவத் தொண்டாற்றிய திருநாரையூர் கோயிலையும், அவர் வழிபட்ட பொல்லா பிள்ளையார் சிலையையும், அவ்வூரையும் இப்பதில் காணலாம்.
இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சளினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாக பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றை கொண்டு போய் இலங்கையில் பதியமிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.
புத்த கயாவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் துறைமுகம் வந்து அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு சங்கமித்தையின் குழுவினர் வந்தனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சொல்லும் வகையில் இவ்வழிப்பாதை சரியானதுதானா என்பதும் கேள்வியாகின்றது.
அசோகர் இந்திரப்பிரஸ்தம் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியிலிருந்து தமிழகத்தின் வேலூர் வரை ராஜபாட்டை என அழைக்கப்படும் ஒரு அரச நெடுஞ்சாலையை அமைத்தார். இச்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். பயணிகள் ஓய்வெடுக்கும் சத்திரங்களைக் கட்டினார். இறுதியாக தமிழகத்தின் வேலூரில் வினையலங்கார விகார் என்ற பெயரில் ஒரு மடாலயத்தையும் அமைத்தார் என அறிகின்றோம். அனேகமாக இந்த ராஜபாட்டை வழியாக மகேந்திரனும் சங்கமித்தையும் தமிழகம் வந்து பின்னர் கடற்கரையோரப் பகுதிகளை வந்தடைந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கலாம். இதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
சங்கமித்தை பெண்களுக்கான பிக்குணிகள் சங்கத்தை இலங்கையில் தோற்றுவித்தார். சங்கமித்திரையின் பயணப் பாதை தொடர்பான ஆய்வுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் .அதே போல மணிமேகலை காப்பிய நாயகியான மணிமேகலையின் இலங்கை வருகையும், பின் ஏனைய பல தீவுகளுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அவர் அட்சயபாத்திரத்தினைக் கையிலேந்தி பௌத்த நெறியைப் பரப்ப மெற்கொண்ட பயணங்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் தமிழகத்திலிருந்து பௌத்த நெறி ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியமைக்கான ஆதாரங்களை வழங்கும்.
இன்றைய இலங்கை அரசியல் சூழலில் சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அடையாளம் காட்டப்படும் மாதகல் சம்பில்துறை சிங்களவர்கள் பகுதியாக அடையாளம் காட்டப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இந்தச் சம்பில் துறை பகுதியில் ஐயனார் கோயில், கிருத்துவ தேவாலயம் மற்றும் வரைவர் கோயில்கள், சிவன் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் சிலவும் உள்ளன.
பௌத்த மதம் சிங்களவருக்கும், ஏனைய சைவ கிருத்துவ மத வழிபாடுகள் தமிழருக்கும் என இருக்கும் இன்றைய சமூக சிந்தனை நிலைப் போக்கு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்ட சூழலுக்குப் புறம்பானதே. பண்டைய இலங்கையில் பௌத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக நீண்ட காலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சூழல் இருந்ததைப் புறந்தள்ளி விட முடியாது. ஆக, யாழ்ப்பாணத்தின் மாதகல் சம்பில்துறை பகுதி தமிழ்மக்கள் வாழ்விடப் பகுதி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
இன்று இப்பகுதி, பௌத்தமதம் சிங்களவருக்கான மதம் என்ற தட்டையான புரிதல், சிங்களவர், தமிழர் இருசாராருக்கும் உள்ளமையால், இரு சாராரும் குழப்பம் நீங்கி இப்பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உள்ள முக்கியத்தையும் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகின்றது. மதத்தை மையப்படுத்திய தவறான புரிதல் இருப்பதால் இப்பகுதி சிங்களவர் பகுதி என அடையாளப்படுத்தப்படும் முயற்சி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குச் சாட்சியாக இப்பகுதியில் இராணுவத்தினர் அதிகமாக நடமாடுவதையும் இப்பதிவுக்காகச் சென்றிருந்தபோது (அக்டோபர் 2018 இறுதி) நேரில் காண நேர்ந்தது.
வரலாற்றுப் பார்வையில் யாழ்ப்பாணத்தின் மாதகல்-சம்பில்துறை பகுதி தமிழர் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய ஒரு பகுதியே!
இப்பதிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர்.புஷ்பரட்ணம் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் காணலாம்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமண சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்களும் புத்தரின் சிற்ப வடிவங்களும் திறந்த வெளிகளிலும், புதர்களிலும், காட்டுப் பகுதிகளிலும் பாதுகாப்பின்றி இருப்பதைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழி காண்கின்றோம். வரலாற்று ஆர்வலர்கள் சிலரது முயற்சிகளினாலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது நமக்கு தெரியவருகின்றன. இத்தகைய சமண பௌத்த வடிவங்களில் சில உள்ளூர் மக்களாலேயே கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இடம்பெறுகின்றன. அப்படி கிடைத்த சில சிலைகளை மக்கள் போற்றி பேராதரவு வழங்கி வழிபடும் போது , சிறிய கோயிலாக உருவாகி, பின் அக்கோயில்கள் பெரிய கோயில்களாக வளர்கின்றன.சில கோயில்கள் மக்களின் குலதெய்வங்களாகவும் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிவிடுகின்றன.
இந்த வகையில் புத்தரின் சிலைகள் பல இடங்களில் கிராமங்களில் மக்களால் சாமியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் குலதெய்வங்களாக மாற்றம் கண்டுள்ள நிகழ்வுகளைக் காண்கின்றோம்.இந்த வகையில் மதுரையில் இன்று பிரசித்தி பெற்று வழிபாட்டில் இடம்பெறும் ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் ஆலயம் அடிப்படையில் ஒரு புத்தரின் சிற்பமாகவே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.
இன்று இக்கோயில் மதுரை மாநகர் மட்டுமன்றி தமிழகம் முழுமைக்கும் புகழ்பெற்ற ஒரு பெருங்கோயிலாக வளர்ச்சி கண்டுள்ளது.
இக்கோயிலின் மூலப்பிரகாரத்தின் உள்ளே மலர்களால் நிறைத்து கிரீட அலங்காரத்துடன் திகழும் முனீஸ்வரராக இத்தெய்வச் சிற்பம் காட்சியளிக்கின்றது. கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் கடைவீதி அமைந்துள்ளது. பொதுமக்கள் வந்து தாங்களே பூசையைச் செய்து வழிபடும் வகையில் கருப்பண்ணசாமி சன்னதியும் இங்குள்ளது.
கோயிலுக்கு வரும் பொதுமக்களில் சிலர் அருள் வந்து குறி சொல்வதும் அவர்களோடு வரும் குடும்பத்தினர் வாக்கு கேட்பதும் இங்கு மிக இயல்பாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே.
அத்தகைய நிகழ்வுகளையும் இக்கோயிலுக்கு உள்ள பௌத்த தொடர்புகளையும் விளக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் அவர்களது விளக்கத்தையும் தாங்கி வருகின்றது இப்பதிவு.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
திருநெல்வேலியின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள திருப்புடைமருதூர் என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் சுவாமி நாறும்பூ நாதர் திருக்கோயில் கோபுர சித்திரகூடத்தையும் அதில் இடம்பெறும் சில காட்சிகள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கான விளக்கங்களையும் கொண்டு வருகிறது இந்தப் பதிவு.
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில் வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.
கடனா நதி என்ற ஆறு தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும் இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏறக்குறைய 10,ம் நூற்றாண்டு தொடங்கி 19 நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. - கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.
கி.பி.9ம் நூற்றாண்டு தொடங்கி அறியப்படும் இக்கோயில் சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் என பல மன்னர்களின் ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.
இக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம் உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்ல படிகள் உள்ளன. ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்ப்பாடுகளாகும்.
இச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
இவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.
இக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்று குறிப்பிடுகின்றார்“.
தமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
இத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான்.
நம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நாம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.
கோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத்தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்!
இப்பதிவில் சுவர்ச்சித்திரங்களைப் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றார் சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கவிஞர், சிற்பி, எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட ஓவியர் சந்ரு அவர்கள். இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டில் உதவிய முன்னாள் திருநெல்வேலி ஆட்சியர் முனைவர்.கருணாகரன், சகோதரர் தீக்கதிர் விஜய் ஆகியோருக்கு நமது நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
இலங்கைத் தீவில் ஐரோப்பியரது மேலாதிக்கம் இருந்தமைக்கு அடையாளமாக இன்றும் காட்சி அளிக்கும் நினைவுச்சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்று. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும், இதற்கு முன்னரே இப்பகுதி வணிகத்திற்காகப் பயன்பட்டது என்பதும் கட்டுமானங்கள் இருந்தன என்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. யாழ்ப்பாண தீபகற்பத்திற்குத் தெற்கே, இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது இக்கோட்டை. கிபி 1619 அளவில் போர்த்துக்கீசியரால் முதலில் இக்கோட்டைக் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பின் அதன் தொடர்ச்சியிலும் ஆட்சி புரிந்த டச்சுக்காரர்கள் இக்கோட்டையை மேலும் விரிவாக்கி தற்போது நாம் காணும் நட்சத்திர வடிவத்துடன் இக்கோட்டையை அமைத்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்னர் இலங்கை தீவை ஆண்ட பிரித்தானியர் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அடிப்படை தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை . ஆகவே இக்கோட்டை டச்சுக் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு ஈராயிரத்திற்கும் முற்பட்ட காலகட்டத்திலேயே ரோமானியருடனும், இந்தியா, அரேபியா ஆகிய நாடுகளுடனும், ஏனைய கிழக்காசிய நாடுகளுடனும் வணிகப் போக்குவரத்துக்கள் இருந்தமையும், இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதி செய்கின்றன. பழமையான கற்கோவில்கள் இங்கு இருந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கின்றன. பிற்கால ஐரோப்பியர் வருகையின் போது அவை சிதைக்கப்பட்டிருக்கலாம் என்பது இந்த யாழ்ப்பாணக் கோட்டை உள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி தெரிய வருகின்றது.
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சிக் காலத்தில் கைப்பிற்றினான். அப்போது இலங்கையின் இன்றைய பொலநருவை உட்பட பல பகுதிகளில் அவனால் சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இந்த யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன், இங்குக் கட்டப்பட்ட கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது.
இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, இப்பகுதி சோழமன்னர் ஆட்சிகாலத்தில், அதாவது கி.பி 9, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதி ஒரு வணிகப் பெறுநகரமாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குவதாக அமைகிறது. இக்கோட்டை அமைந்திருக்கும் பகுதி ஐந்நூற்றுவன் வளவு என அழைக்கப்படுகின்றது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுக்களில் பெயர்களையும் நகரங்களின் பெயரையும் ஒத்த வகையில் இது அமைந்திருப்பதையும் காணவேண்டியுள்ளது. இது இப்பகுதி ஒரு வணிகப்பெருநகரமாக அக்காலகட்டத்தில் திகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது.
டச்சுக்காரர்கள் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த ஆவணங்களில் யாழ்ப்பாணக் கோட்டை கட்டிய வரலாறும் கோட்டையைக் கட்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய கற்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்ற வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதில் கோட்டை கட்டுவதற்கு வேண்டிய முருகக் கற்கள் (கோரல் கற்கள்) அருகில் உள்ள வேலனை, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டன என்ற செய்திகளை அறியமுடிகின்றது.
இத் தீவுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து முருகக் கற்களைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் 3 பணம் வழங்கப்பட்டது என்றும், கடலிலிருந்து கற்களைச் சேகரித்து தோணி ஏற்றுவதற்கு தோணி ஒன்றுக்கு அரைப் பணம் வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது இக்கோட்டைக்குள் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. கி.பி1730ல் கட்டிமுடிக்கப்பட்ட இத்தேவாலயத்தின் அமைப்பு சிலுவை போன்ற வடிவில் அமைந்துள்ளது. தற்சமயம் இந்தத் தேவாலயம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலயத்தின் முழுமையான வடிவமைப்பைத் தெரிந்து கொள்ள முடியாத அளவில் ஆலயம் முற்றாக அழிந்து கல் மேடாகக் காட்சியளிக்கிறது.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற போரில் இந்த யாழ்ப்பாணக் கோட்டை பெரிய பாதிப்பை சந்தித்தது. போருக்குப் பின் இன்று இக்கோட்டையின் சில பகுதிகளைப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை உள்ள இப்பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களும் பழமையான சிவாலயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் தூண்கள், கட்டிடத்தின் பாகங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
இக்கோட்டைப்பகுதியில் மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுமானால் இப்பகுதியின் பண்டைய நாகரிகமும் வணிகச் சிறப்பும் மேலும் ஆய்வுலகத்தினால் வெளிக்கொண்டரப்படலாம்.
துணைநூல்கள்-
இலங்கைத் தமிழர் வரலாறு - ஒரு சுருக்க வரலாறு, பேரா.ப.புஷ்பரட்ணம்
வரலாற்று உலா, ஆ.சி.நடராசா
இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த பேராசிரியர். ப.புஷ்பரட்ணம், ஆசிரியை வாலன்றீனா இளங்கோவன் ஆகியோருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய எழுத்தாளர் மதுமிதா ஆகியோருக்கு நமது நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் இலங்கை, இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஆவணங்களைத் தன் சொந்த பணத்தைச் செலவிட்டு இணையத்தின் வழி ஏலத்தில் எடுத்து சேகரித்து வைத்துப் பாதுகாக்கின்றார் திரு.முருகையா வேலழகன். இவர் 1980களின் வாக்கில் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்தில் சில ஆண்டுகள் இருந்து பின்னர் நோர்வே நாட்டிற்கு வந்து குடியேறியவர். இன்று தமது குடும்பத்தினருடன் ஓஸ்லோ நகரில் வசித்து வருகின்றார். நோர்வேஜியன் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழ்ச்சங்கத்திலும் பொறுப்புமிக்க பணியை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவர் இவர்.
இவரது சேகரிப்பில் உள்ள
-நூறு வருடங்களுக்கு மேற்பட்ட யாழ்ப்பாணம், மலையகத் தமிழ் மக்கள் தொடர்பான அஞ்சல் அட்டைகள்
-இலங்கை நில வரைபடங்கள்
-பாரம்பரிய ஈய, பித்தளை, வெண்கல பாத்திரங்கள்
-வித்தியாசமான எழுத்தாணி
-புகைப்படங்கள்
ஆகியனவற்றை இந்த விழியப் பதிவில் காட்சி படுத்துகின்றார்.
இவர் சேகரிப்பில் உள்ள இந்த அரும்பொருட்களின் மின்னாக்க வடிவங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காவும் வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றோடு தான் நோர்வே நாட்டிற்கு வந்த போது நோர்வே தனக்கு அளித்த ஆதரவு, பாதுகாப்பு உதவிகள், தமது ஆரம்பகால வாழ்க்கை நிலை பற்றிய செய்திகளையும் இப்பதிவில் பகிர்கின்றார்.
இலங்கைத் தமிழ் மரபுரிமையின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருக்கும் திரு.வேலழகன், யசோதா மற்றும் அவர்களது மகள் சுராதி ஆகியோரை வாழ்த்துகின்றோம்.
யூடியூபில் காண: https://youtu.be/ETLDVUPYd1s
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும், குறிப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.
நோர்வே நாட்டிற்கு கடந்த நூற்றாண்டில் இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் முதலில் வந்த தமிழர் என அழைக்கப்படுபவர் ”குட்டி மாமா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார்சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார். லெபனான் மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் அங்கு சில மாதங்கள் பணி புரிந்தபின்னர் 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார்.
மீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். ஒரு நோர்வே இன பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள். இலங்கைக்கு தனது மனைவி, குழந்தையுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார்.
இலங்கை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களை உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. முதலில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலுமாக இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இன்று திரு.ஆண்டனி ராஜேந்திரன் மறைந்து விட்டார். ஆனாலும் நோர்வே தமிழர்கள் எனும் போது வரலாறு படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.
இச்செய்திகளை நமக்காக இப்பேட்டியில் வழி வழங்குகின்றார் அவரது உறவினர் திரு.ஜெயநாதன்.
திரு.ஜெயநாதன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இத்தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய சில தகவல்களும் இப்பேட்டியில் இணைகின்றது.
இப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த நோர்வே தோழர் திரு.முருகையா வேலழகன் அவர்களுக்கு நமது நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
திருவள்ளுவர் பற்றிய வரலாற்றுக் கதைகளாகச் சில புனைகதைகள் உலவுகின்றன. திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய முற்படும் போது அதற்கு வரலாற்றுச் சான்றுகளை முன் வைத்து ஆய்வுகளை அலச வேண்டிய தேவை உள்ளது. இதனை இந்தப் பதிவில் விளக்குகின்றார் ஆய்வாளர் திரு.கௌதம சன்னா.
திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்பதற்கான ஆதாரம், களப்பணியின் மூலம் தாம்சேகரித்த தகவல்களின் வழி திருவள்ளுவர் பிறந்த வாழ்ந்த இடத்தைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துபவர் அயோத்திதாசப் பண்டிதர். அதன் அடிப்படையில் திருவள்ளுவரின் காலம், அவரது வாழ்க்கை பின்புலம், அவரது மறைவு உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் அலசுகின்றது இப்பதிவு.
அயோத்திதாசரின் தாத்தாவிடம் இருந்த திருக்குறள் மூலச்சுவடி F.W.எல்லிஸிடம் சென்று பின்னர் அச்சுபதிப்பு கண்டது. திருவள்ளுவரின் வரலாறு கூறும் திருவள்ளுவமாலை எனும் நூலில் இடைச்சேர்க்கைகள் இணைக்கப்பட்டதால் பல புராணக்கதைகளாக அவரது வரலாறு திரிக்கப்பட்டது.
திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோயில், வீரராகுல விகார் எனும் பௌத்த ஆலயம் என்ற தகவல்கள்.. இப்படி பல செய்திகளோடு வருகின்றது இப்பதிவு.